இன்னும் 20 அமாவாசைகள் தான் ஸ்டாலின் ஆட்சியின் ஆயுட்காலம் - அதிமுக தரப்பில் வெளியான பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட மாடல் என்ற பெயரில் ஒரு காட்டாட்சி தர்பார் நடந்து கொண்டிருப்பதும், செய்வதறியாது மக்கள் திகைத்துப் போய் நிற்பதும் நாடறிந்த உண்மை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "ஆடு, மாடு, கோழிகளை அறுப்பது போல், மனிதத் தலைகள் வெட்டப்படுகின்ற செய்தி நாள்தோறும் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. வாடகை கொலையாளிகள் சர்வ சாதாரணமாக எந்தவித பயமும் இல்லாமல் உலா வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கொலைக் குற்றவாளிகள் கொடும் ஆயுதங்களால் சர்வ சாதாரணமாக கொலை செய்கின்றனர்.

அனைத்து சமூக விரோதச் செயல்களுக்கும் அடிப்படைக் காரணமாக விளங்கும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை கனஜோராக நடைபெறுகிறது. இதில், ஆளும் திமுக-வினரே ஈடுபடுவதாகவும் செய்திகள் வருகின்றன. இதையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கழகப் பொதுச் செயலாளர் ‘புரட்சித் தமிழர்’ அண்ணன் எடப்பாடியார் அவர்கள் பலமுறை அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் மூலமாகவும், சட்டப் பேரவையிலும் எடுத்துக் கூறியுள்ளார்.

இவை எதற்கும், காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் பொறுப்பான பதில் அளிக்கவில்லை. அதைவிடக் கொடுமை, ‘தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும்' காவல் துறைத் தலைவர் அவர்கள் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் உண்மை நிலவரங்களை ஆட்சியாளர்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அப்பாவி மக்களை சமூக விரோதிகளிடமிருந்து காக்கும் உன்னதப் பணியில் உள்ள காவல் துறை தலைமைப் பொறுப்பில் உள்ள அதிகாரி உண்மை நிலையைக் கண்டறிந்து, அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், நாட்டில் கொலைக் குற்றச் சம்பவங்களின் உண்மை எண்ணிக்கையை மறைத்து நாளிதழுக்கு பேட்டி அளிப்பது வேதனை அளிக்கிறது.

‘ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல்', மக்களின் வாழ்வு, பற்றி எரியும்போது ஆட்சியாளர்களின் ஊதுகுழல்களாக மாறி, பொறுப்புள்ள அதிகாரிகள் பிரச்சனைகளின் தீவிரத்தைக் குறைக்க முயற்சிப்பது ஏற்கத்தக்கது மட்டுமல்ல,
கண்டனத்திற்குரியதாகும்.

போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுப்பதற்கு, திறமையற்ற முதலமைச்சராகத் திகழும் திரு. ஸ்டாலின், போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கத் தவறியதோடு, 'போதைப் பழக்கத்திற்கு அடிமையாகமாட்டோம்' என்று மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் உறுதிமொழி எடுக்கச் சொல்வது விடியா திமுக ஆட்சியின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது.

திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. ஜெயகுமார் கொலையில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் உண்மைக் குற்றவாளிகளை இதுவரை காவல் துறையினர் கைது செய்யவில்லை என்று குற்றம் சாட்டி அவரது மனைவியும், 2 வயது மகளும், ஆதரவாளர்களும் வீதியில் இறங்கிப் போராடும் நிலையும், அவர்கள் மீதே இந்தக் கொடுங்கோல் அரசு வழக்கு போடும் அவலமும் அரங்கேறியுள்ளது. மேலும், திருமதி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இந்த விடியா திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.

அரசியல் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குற்றங்களைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத, மாவட்டங்களில் உள்ள காவல் துறை உயர் அதிகாரிகள், ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் போல் கைகட்டி சேவகம் செய்வதை தமிழகம் இதுவரை கண்டதில்லை.

இன்னும் 20 அமாவாசைகள் தான் இந்த திராவக மாடல் ஆட்சியின் ஆயுட்காலம் என்பதை காவல் துறை அதிகாரிகள் மனதில்கொண்டு, நடுநிலையோடு குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களைப்போல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி தமிழக மக்களைக் காக்கும் பணியில் இதய சுத்தியோடு ஈடுபட வேண்டும் என்று ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK RP Udhayakumar Condemn to DMK CM Mkstalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->