புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மீது படுத்துக்கொள்ளுங்கள்! திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தை விமர்சனம் செய்த அதிமுக! - Seithipunal
Seithipunal


காரியம் ஆக வேண்டும் என்றால் யார் காலையும் பிடிப்பதும் காரியம் முடிந்த பின் காலை வருவதையும் கொள்கையாகக் கொண்ட திமுக! 

பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டம் நாளை காலை 10:30 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. 

இந்த நிலையில் அனைத்து கட்சிகள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமார் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் "புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மீது படுத்துக்கொள்ளுங்கள் என்று ஒரு அதிபுத்திசாலி சொல்வது போல் பொருளாதாரத்தில் பின்தங்கியதற்கான இட ஒதுக்கீடு விஷயத்தில் தும்பை விட்டு விட்டு வாழை பிடிக்கும் கதையாக சட்டமன்ற அனைத்து கட்சிகளையும் இன்றைய முதல்வர் துணைக்கு அழைக்கிறார். ஏறத்தாழ 17 ஆண்டுகள் மத்திய அரசில் கொஞ்சி குலாவிய போது மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, நீட் மற்றும் 10% பொருளாதார இட ஒதுக்கீடு போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு பூம் பூம் மாடு போல் தலையாட்டி விட்டு இன்றைக்கு ஏதோ வறியவர்களை காக்க அவதாரம் எடுத்தது போல் வித்தைக்காண்டிக் கொண்டிருக்கிறார் இந்த பேச மடந்தை முதல்வர். 

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் குறித்து ஆராய 2006ஆம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தது காங்கிரஸ்-திமுக கூட்டணிலான மத்திய அரசு. அந்த கமிஷன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான சட்டத்தை உருவாக்கியதும் காங்கிரஸ்-திமுக மத்திய கூட்டணி அரசுதான். அப்பொழுது திமுக சார்பில் பதவியில் இருந்த மத்திய அமைச்சர்கள் அமைச்சரவையில் ஒப்புதல் அளித்ததும் நாடறிந்த உண்மை. இந்த சட்டத்தை தான் தற்பொழுது பாஜக அரசு 2019-ல் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது. 

காரியம் ஆக வேண்டுமென்றால் யார் காலையும் பிடிப்பதும், காரியம் முடிந்தவுடன் காலை வருவதையும் கொள்கையாகக் கொண்ட திமுக தலைமை தற்பொழுது பாஜக தேவையில்லை என்பதால் இந்த சட்டத்தை எதிர்ப்பது போல் நடிக்கிறது. இந்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்த பொழுது இந்த வழக்கில் எப்படியெல்லாம் நம்முடைய வாதங்களை எடுத்து சொல்ல வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து ஆலோசனை நடத்தாமல் தான்தோன்றித்தனமாக வாதிட்டு  மூக்கு அறுப்பட்ட பின் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு தற்பொழுது மற்ற கட்சிகளை அழிப்பது எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்? 

திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் இந்த முதல்வரின் இரட்டை வேடத்தை புரிந்து கொண்டு அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது. பொருளாதார அடிப்படையிலான இந்த இட ஒதுக்கீட்டை மனமுவந்து வரவேற்பதாக அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

எங்களுடைய இதய தெய்வங்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் எளிய மக்களுக்காக சட்ட பாதுகாப்பு ஏற்படுத்தி தந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எந்தவித பங்கமும் வராமல் பார்க்கும் வேலையாவது இந்த விடிய அரசின் முதல்வர் உறுதியோடு மேற்கொள்ள வேண்டும். இதற்காக முன்னேற்பாடுகளை தலைசிறந்த வழக்கறிஞர்களுடன் வைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்காட்ட வேண்டும் என்று இந்த வீடியா திமுக அரசை வலியுறுத்துகிறோம். 

ஆட்சிக்கு வந்தால் ஒரு கையெழுத்தில் நீட் ஒழிப்பேன் என்று கூறி மக்களை ஏமாற்றியது போல் இந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்த போது கொண்டு வந்த இந்த பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு விஷயத்திலும் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசனம் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு / மறு ஆய்வு செய்வதற்கு என்று ஆலோசனை பெறும், சட்டமன்ற அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற இந்த திமுகவின் கபட நாடகத்தை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என தனது அறிக்கையில் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK boycotts all party meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->