சென்னைக்கு விரைந்த எய்மஸ், ஜிப்மர் மருத்துவ குழு.. குவிக்கப்பட்ட போலீஸ் படை.. நெருங்கும் கிளைமேக்ஸ்..!!
AIIMS and JIPMER Medical Team visit Chennai
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக சென்னை ஓமந்துரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி 15 நாள் நீதிமன்ற காவலில் இருப்பதால் காவேரி மருத்துவமனையை சுற்றி புழல் சிலையைச் சேர்ந்த காவல்துறையினர் கட்டுப்பாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் காவிரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிப்பது தொடர்பான வழக்கின் பொழுது அமலாக்க துறையின் சார்பில் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவர்கள் குழு கண்காணிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் குழுவும், இ.எஸ்.ஐ மருத்துவர்கள் குழுவும் பரிந்துரை அளித்ததன் அடிப்படையில் அவரது மனைவி மேகலாவும் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் காரணமாக அறுவை சிகிச்சை கொள்வதற்கான முதற்கட்ட பணிகளை காவேரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தம் மற்றும் இசிஜி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அறுவை சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும் என தகவல் வெளியானது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அடுத்த மூன்று நாட்களுக்கு மருத்துவ குழுவின் கண்காணிப்பின் அடிப்படையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவ குழுவினர் சென்னை வரவுள்ளனர். இவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையில் ஆய்வு செய்ய உள்ளனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட உள்ள சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான பணிகளை கண்காணிக்க உள்ளனர்.
இன்று காலை வரை தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்பொழுது மேலும் 30 காவலர்கள் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ள அறுவை சிகிச்சை குறித்து நேரடியாக எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவர்கள் குழு அடுத்த மூன்று நாட்களுக்கு கண்காணித்து அதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
AIIMS and JIPMER Medical Team visit Chennai