தாய்மொழி கல்வியை புறக்கணிக்கும் திமுக அரசு.. வீண் விளம்பரங்களை நிறுத்திவிட்டு முனைப்பு காட்டுங்க.. அண்ணாமலை அட்வைஸ்..!!
Annamalai advises TNgovt about mother tongue education
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேராததால் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் 6 ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளும் தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், தூத்துக்குடி, நாகர்கோவிலில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இத்தகைய நடவடிக்கைக்கு தமிழ் வழி பாடப்பிரிவில் மாணவர்கள் சேராததால் தற்காலிகமாக நிறுத்துவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்திருந்தார். அமைச்சரின் இத்தகைய விளக்கத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "அண்ணாபல்கலைக் கழகத்தின் 11 உறுப்புக் கல்லூரிகளில், தமிழ் வழியில் பொறியியல் கல்வி பாடப்பிரிவுகள் இருந்ததை, இந்த ஆண்டு முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை, நாடு முழுவதும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறது. மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்கள், தாய்மொழியில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று அறிவித்து, அதற்கான தொடர் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால், தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசோ, தாய்மொழி குறித்து சிறிதும் சிந்திக்காமல், தமிழைத் தொடர்ந்து புறக்கணிக்கும் முயற்சிகளை மேற்கொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மாணவர்களிடையே தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இருக்கும்போது, இது போன்ற அறிவிப்புகள் தாய்மொழிக் கல்வியை நீர்த்துப் போகச் செய்கிறது. தமிழ் மொழிப் பொறியியல் பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்த ஊடகங்களின் கேள்விக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி, ஒரு மாணவர் கூட தமிழ் வழிக் கல்வி பொறியியல் பிரிவில் சேரவில்லை என்ற மழுப்பலான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அதனைச் செய்யத் தவறியது திமுக அரசின் குற்றம். செய்யாத சாதனைகளுக்காக வீண் விளம்பரங்கள் செய்வதை நிறுத்தி விட்டு, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Annamalai advises TNgovt about mother tongue education