அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!...எங்கே?...எப்போது?
Announcement of AIADMK mass protest demonstration Where When
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மாடம்பாக்கம் பகுதியில், மொத்தம் உள்ள 6 வார்டுகளில், 65, 66, 69, 70 ஆகிய வார்டுகளில் கழகத்தைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணியாற்றி வரும் நிலையில், பொதுமக்களிடையே கழகத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் எவ்விதப் பணிகளையும் செய்து தராமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. அரசும், மாநகராட்சி நிர்வாகமும் அலைக்கழித்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
தி.மு.க. ஆட்சியில் கடந்த ஒரு வருட காலமாக குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது. மாடம்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட சாலைகளில் இரவு நேரத்தில் எண்ணற்ற மாடுகளும், தெரு நாய்களும் சுற்றித் திரிவதால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
தாம்பரம் மாநகராட்சி, மாடம்பாக்கம் பகுதியில், கழகத்தைச் சேர்ந்தவர்கள் மாமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 65, 66, 69, 70 ஆகிய வார்டுகளில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றித் தராத தி.மு.க. அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், அ.தி.மு.க. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மாடம்பாக்கம் பகுதிக் கழகத்தின் சார்பில், 26.9.2024 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில், அண்ணாநகர்-மாடம்பாக்கம் பிரதான சாலையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Announcement of AIADMK mass protest demonstration Where When