அதானி உலக பணக்காரராக, நாங்க ஏன் அதிக கரண்ட் பில் கட்டணும்? போராட்டத்தை அறிவித்த அறப்போர் இயக்கம்! - Seithipunal
Seithipunal


அதானி ஊழல்கள் மீது மத்திய மாநில அரசுகள் FIR பதிவு செய்து விசாரணை செய்யவும், இழந்த ஊழல் பணத்தை அதானி மற்றும் ஊழல் செய்த மற்றவர்களிடம் இருந்து மீட்டெடுக்கவும், அந்த ஊழல் பணத்தை நம் தலை மேல் கரண்ட் பில்லாக ஏற்றியதை திரும்ப பெற வலியுறுத்தி, ஜனவரி 5 ஆம் தேதி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 9. 30 மணிக்கு அறப்போர் இயக்கம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை அறப்போர் புகாரான அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழலில் பூர்வாங்க விசாரணையை துவங்கி உள்ளது என்ற செய்தி வெளிவந்து ஒரு சில நாட்களிலேயே, கௌதம் அதானி ஜூலை 2024 இல் தனி விமானத்தில் சென்னை வந்தார். 

அவர் சென்னையில் எந்தெந்த பொது ஊழியர்களை சந்தித்தார், அதில் என்ன பேசப்பட்டது, லஞ்ச ஒழிப்புத்துறை இன்று வரை ஏன் முதல் தகவல் அறிக்கை கூட இந்த புகாரில் பதிவு செய்யவில்லை என்று அறப்போர் இயக்கம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்துள்ளது. 

கௌதம் அதானி ஜூலை மாதம் சென்னை வந்த பொழுது எந்தெந்த  பொது ஊழியர்களை சந்தித்தார் என்ற விவரமும் அந்த சந்திப்புகளின் காரணம் குறித்து தகவல் அறியும் சட்டம் மூலமாக அறப்போர் இயக்கம் தமிழ்நாட்டின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையிடம் கேட்டிருந்தோம். செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அவர்களிடம் இது குறித்து எந்த தகவலும் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் பதிலில் தெரிவித்துள்ளனர். 

பொதுவாக  மிகப்பெரிய தொழிலதிபர்களும் மற்றவர்களும் வந்து இங்கு அரசில் இருப்பவர்களை சந்திக்கும் பொழுது அது குறித்த புகைப்படங்களை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை வெளியிடுவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஆனால் கௌதம் அதானி எந்தெந்த பொது ஊழியர்களை சந்தித்தார் என்பது குறித்தான தகவல்களே தங்களிடம் இல்லை என்பது மிக ஆச்சரியமாக உள்ளது. 

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கே தெரியாத அளவில்  கௌதம் அதானியின் சந்திப்புகள் ரகசியமாக நடந்துள்ளதா ?? தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் கௌதம் அதானி தமிழ்நாட்டில் எந்தெந்த பொது ஊழியர்களை சந்தித்தார் மற்றும் அந்த சந்திப்புகளில் எது குறித்து பேசப்பட்டது என்பதற்கான விளக்கத்தினை தெளிவாக வழங்கிட வேண்டும் . ஒருவேளை அவர் எந்த பொது ஊழியரையும்  சந்திக்கவில்லை என்றால் அதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். 

எதிர்க்கட்சித் தலைவராய் இருந்த மு க ஸ்டாலின் அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழல் மீது சிபிஐ விசாரணை  கோரியதும் ஆளுநரை சந்தித்து லஞ்ச ஒழிப்புத்துறை இதன் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் முழக்கமிட்டுவிட்டு தற்பொழுது ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டு காலத்தில் அவரது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு FIR கூட பதிவு செய்யாதது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது.

கௌதம் அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழல், சோலார் லஞ்ச ஊழல் உள்பட இந்தியா முழுவதும் அதானி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள பல்வேறு ஊழல்களின் மீது  மத்திய மாநில அரசுகள் FIR பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டி அழுத்தம் கொடுப்பதற்காக அறப்போர் இயக்கம் ஜனவரி 5ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் காலை போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arapor Iyakkam Protest announce DMK BJP Adani Scam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->