திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளுக்கு மக்களின் வாழ்வாதாரத்தை அடகுவைக்க வேண்டுமா? ஸ்டாலினுக்கு வானதி கேள்வி!
BJP MLA Vanathi Condemn to CM Stalin for Floods
தமிழகத்தின் வட மாவட்டங்களை பெரிதும் வதைப்பது எது? ஃபெஞ்சல் புயலின் கோர முகமா? அல்லது தமிழக முதல்வரின் பாராமுகமா? என்று, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மழை வெள்ளத்தால் உருக்குலைந்து போன விழுப்புரம் மாவட்டத்தில் “வீடியோ கால்” மூலம் கள ஆய்வு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே,
தமிழகத்தில் அடித்து ஓய்ந்துள்ள ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தமிழகத்தின் பல மாவட்டங்களைப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்திய நீங்கள், தமிழகத்தின் வட மாவட்டங்களையும் டெல்டா மாவட்டங்களையும் கவனிக்கத் தவறியது ஏன்?
வானிலை மையத்தின் முன்னறிவிப்பு ஓரளவு சரியாக இருந்தது என்று நீங்களே ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், வட மாவட்டங்களில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்காமல் அலட்சியப்படுத்தியது ஏன்?
மீடியாக்களின் மொத்த கவனமும் தலைநகரின் மீது தானிருக்கும் என்ற அனுமானத்திலா? அல்லது “வடக்கு” என்ற சொல்லின் மீது உங்களுக்குள்ள ஒவ்வாமையினாலா?
நீங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கால்வாய்களை சீர்படுத்தவும், கண்மாய்களை தூர்வாரவும், எரிகளை மறுசீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தமிழக மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தும், பாசனக் கால்வாய்களை மறுசீரமைக்க தவறியது ஏன்?
நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்காவிடில் வீடுகள், சாலைகள் மற்றும் விளை நிலங்களுக்குள் புகுவதைத் தவிர மழைநீர் வடிய வழியேது?
திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளுக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் தங்களின் வாழ்வாதாரத்தை அடகுவைக்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP MLA Vanathi Condemn to CM Stalin for Floods