தலைகுனிந்து நிற்கும் தமிழகம்! இன்னும் எத்தனைப் பெண்களின் மானமும், கண்ணீரும், உயிரும் காணிக்கையாக்கப்பட்ட வேண்டும்? முதல்வருக்கு வானதி சீனிவாசன் கேள்வி!
BJP MLA Vanathi Srinivasan Condemn to DMK Govt MK Stalin Law and order
இந்த திராவிட மாடல் ஆட்சியில், தமிழகம் தன்சிறப்பினை இழந்து தலைகுனிந்து நிற்பதாக பாஜக எம்எல்ஏ விமர்சித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையை, பட்டப்பகலில் வகுப்பறைக்குள்ளேயே புகுந்து மாணவர்கள் கண்ணமுன்னே கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவத்தைக் கேள்வியுற்று நெஞ்சம் பதறுகிறது. கொடூரமாக கொலையுண்ட அந்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“பெண்களைப் போற்றி பாதுகாக்கும் அரசு” என வீண் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களே,
கடந்த 3 ஆண்டுகளில் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்புவதற்கும், படித்த பிள்ளைகளை பணிக்கு அனுப்புவதற்கும் பயந்து நடுங்குவது தான் உங்கள் திராவிட மாடல் அரசின் சாதனையா?
ஆயிரம் தடைகளைத் தகர்த்து சாதிக்கும் கனவோடு வெளியுலகில் காலெடுத்து வைக்கும் பெண்களுக்கு உங்கள் அரசு கொடுக்கும் பாதுகாப்பும் வரவேற்பும் இதுதானா?
அரசுக் கட்டிடங்களுக்குள் அரசுப் பணியாளர்களுக்கே உரிய பாதுகாப்பு இல்லையென்றால், திமுக அரசு இருந்து என்ன பயன்?
அரசு மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு ஆசிரியர்கள் என அரசுப் பணியாளர்களின் மீது தொடர்ந்து நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களை நீங்கள் அலட்சியப்படுத்துவது ஏன்?
ஒவ்வொருமுறையும் தெருவில் இறங்கி போராடினால் மட்டும் தான் தமிழக மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுமா?
அல்லது நாளுக்கு நாள் பெருகிவரும் குற்றச் செயல்களை வெற்று விளம்பரங்கள் மூலம் பூசி மொழுகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?
தமிழகத்தில் சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கை நீங்கள் சரிசெய்ய, இன்னும் எத்தனைப் பெண்களின் மானமும், கண்ணீரும், உயிரும் காணிக்கையாக்கப்பட்ட வேண்டும்? என்று முதல்வருக்கு வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP MLA Vanathi Srinivasan Condemn to DMK Govt MK Stalin Law and order