அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்குங்கள் - முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடியை கொடுத்த உச்சநீதிமன்றம்!
BJP Narayanan SC Order DMK Senthilbalaji MK Stalin
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பெறுவதற்காக செந்தில்பாலாஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் ஒருவரான வித்யாகுமார் என்பவர், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்தும், உடனடியாக பிணையை ரத்து செய்யக் கோரியும் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் ஏ.எஸ். ஓகா தலைமையிலான அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”என்ன இது. செந்தில் பாலாஜிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் நேரடியாக அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.
இது நிறுத்தப்பட வேண்டும். அவர் அமைச்சராக்கப்பட்டதால், வழக்கின் சாட்சிகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற பொதுமக்களின் அச்சம் நியாயமாக்கப்படும்” என்று தமிழக அரசின் சார்பில் நேர்நின்ற வழக்கறிஞர் சித்தார்த்தா லூத்ராவை நோக்கி வினா எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "என்ன நடக்கிறது தமிழகத்தில்? நாங்கள் பிணை அளித்த மறுநாளே நீங்கள் சென்று அமைச்சராகி விட்டீர்கள். அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருப்பதால் சாட்சிகள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாவார்கள் என்று யாராக இருந்தாலும் எண்ணுவார்கள்" என்று உச்சநீதி மன்றம் செந்தில் பாலாஜிக்கு பிணை அளித்த திரும்ப பெறுமாறு கோரிய வழக்கில் கேட்டிருப்பது தமிழக முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டியிருக்கும் என நம்புகிறேன்.
உச்சநீதிமன்றத்தின் இந்த கேள்விகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு பொறுப்பான முதலமைச்சருக்கு அழகு. அதனடிப்படையில் உடனடியாக செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி, தான் பொறுப்பான முதலமைச்சர் என்பதோடு உச்சநீதி மன்றத்தை மதிப்பவர் என்று நிரூபிப்பாரா மு. க .ஸ்டாலின் அவர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்..
முன்னதாக பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், "தமிழ்நாட்டில் மிக அதிக அதிகாரம் பெற்ற அமைச்சராக செந்தில் பாலாஜி திகழும் நிலையில், அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. செந்தில் பாலாஜிக்கு எதிரான சாட்சிகள் மிரட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியானதாக இருக்காது. எனவே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கும் மாற்றும்படி உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்" என்று இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
BJP Narayanan SC Order DMK Senthilbalaji MK Stalin