"24 மணி நேர பாதுகாப்பு வளையத்திற்குள் பவன் கல்யாண்" - உயிருக்கு ஆபத்து என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து நடவடிக்கை..!!
Central Intelligence Department Warns Andhra Deputy CM Pawan Kalyan For Death Threat
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அவருக்கு 24 மணி நேர பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி மற்றும் பாஜக ஆகியவை ஒரு அணியில் போட்டியிட்டு வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராகப் பொறுப்பேற்ற நிலையில், ஜனசேனாவின் பவன் கல்யாண் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில் தான் மத்திய உளவுத்துறை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக எச்சரித்துள்ளது.
மேலும் சில சட்டவிரோத அமைப்புகள் பவன் கல்யாணைக் கொல்ல முயற்சிப்பதாக உளவுத்துறை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகள் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை தொடர்பு கொண்டு எச்சரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பவன் கல்யாணிற்கு தற்போது 24 மணி நேரமும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு அளிக்கப் படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் மத்திய உளவுத்துறையின் இந்த எச்சரிக்கை ஆந்திர மக்களிடமும், பவன் கல்யாண் ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும், அதற்கு முன்னரே சில முறையும் சில மர்ம நபர்கள் தன்னை கொலை செய்யத் திட்டமிடுவதாக பவன் கல்யாண் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Central Intelligence Department Warns Andhra Deputy CM Pawan Kalyan For Death Threat