தமிழகத்தில் மதரீதியான மோதல்கள்! இதெல்லாம் கலவரத்திற்கு வித்திடும் - கொந்தளிக்கும் திமுகவின் கூட்டணி கட்சி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மதரீதியான மோதல்கள் நடைபெறுவதாக தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி நிகழ்ச்சியில் மோகன் பகவத் ஆற்றிய உரை, மதப்பகைமையையும் மதக்கலவரத்தையும் திட்டமிட்டு தூண்டும் நோக்கத்தை கொண்டதாகவே இருக்கிறது. 

அனைத்து சமூக மக்களுக்கிடையேயான நல்லிணக்கம், இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு, ஒருங்கிணைந்த வளர்ச்சி என மேலெழுந்த வாரியாக பேசுவதும் ஆனால், அதே சமயத்தில் மதவெறி நிகழ்ச்சி நிரலை முன்னிறுத்தும் இந்துத்துவ அரசியலை பின்பற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் என இரட்டை வேடம் போடுகிற ஆர்.எஸ்.எஸ் பாணியை அப்பட்டமாக வெளிப்படுத்தும் தன்மையிலேயே அவரது உரை அமைந்திருக்கிறது.

நாட்டை பாதுகாக்க மத அடிப்படையில் நாம் ஒன்று திரள வேண்டும் எனும் அவரது கோரிக்கை, மறைந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய நூல்களின் உள்ளடக்கங்களையே மீண்டும் வெளிப்படுத்துகிறது.

இந்தியா என்பது இந்துக்களுக்கான தாய்நாடு எனவும் இங்கு சிறுபான்மை முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் வாழ வேண்டுமானால் "பாரத பண்பாட்டை" ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு இந்நாட்டில் இடமில்லை என எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய ‘நாம் அல்லது நமது வரையறுக்கப்பட்ட தேசியம்' எனும் புத்தகத்தின் பக்கங்களை மீண்டுமொருமுறை வாசித்ததைப் போலவே விஜயதசமி விழாவில் மோகன் பகவத் பேசியிருக்கிறார்.

நமது நாட்டின் அடிப்படையான மதச்சார்பின்மை கோட்பாட்டை முன்னெடுக்கும் அரசியல் கட்சியினரை 'சுயநலமிகள்' என்றும் அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் மோகன் பகவத் பேசியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

தமிழ்நாடு, கேரளா, பீகார் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மதரீதியான மோதல்கள் நடைபெறுவதாகவும் பதற்றமான நிலையை நீடிப்பதாகவும் கற்பனையான கதையை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார். அவரது இத்தகைய பேச்சு கடும் கண்டனத்துக்குரியதாகும்.

பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத நல்லிணக்கமும், ஒருமைப்பாடும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மாறாக பாஜக ஆளும் மாநிலங்களில் தான் படுகொலைகள், பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள், பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள், சிறுபான்மையினர்கள் மீதான தாக்குதல்கள், அவர்களது வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதலும், புல்டோசர் இடிப்புகளும் அன்றாட நடவடிக்கைகளாக இருக்கிறது என்பதை மோகன் பகவத் வசதியாக மறைக்கிறார்.

மேலும், இந்து மதத்தை பின்பற்றும் மக்களுக்கோ, அவர்களது வழிபாட்டிற்கோ ஏதேனும் ஒரு சிறு இடையூறு வந்தாலும் அரசை அணுகாமல், சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் தாங்களாகவே களத்தில் இறங்கி தங்களுக்கான நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் எனும் அவரது அறைகூவல், மதவெறி மோதல்களை மேலும் அதிகரிக்கச் செய்ய வேண்டும் எனும் நோக்கத்தை கொண்டதாகவே இருக்கிறது.

கல்வி நிலையங்களில் போதிக்கப்படும் பாடத்திட்டங்கள் ‘மதச்சார்பற்ற தன்மையை' அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அவற்றை முற்றாக நிராகரித்து பாடத்திட்டங்களை அடியோடு மாற்ற வேண்டும் எனவும் கல்வி வளாகங்களை கைப்பற்ற வேண்டுமெனவும் வேண்டுகோளையும் வைத்திருக்கிறார். மோகன் பகவத்தின் இத்தகைய விருப்பத்தை தான் மத்திய அரசாங்கமும், பாஜக ஆளும் மாநிலங்களும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

வங்கதேசத்தில் ஒரு சில இடங்களில் சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்புபடுத்தி, இந்தியாவிலும் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனும் குற்றச்சாட்டையும் முன் வைக்கிறார். அந்நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினரான இந்துக்கள் தாக்கப்படுவது கண்டனத்திற்குரியது.

மேலும் மதவெறி, அரபு வசந்தம், மார்க்சிய கலாசாரம் எனும் வார்த்தைகளினூடாக இதர மதங்களின் மீதும், சித்தாந்தங்களின் மீதும் தனக்கு இருக்கும் வெறுப்பையும் உமிழ்கிறார் மோகன் பகவத். நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர்.எஸ்.எஸ். மத அரசியலை முன்வைத்து இந்துத்துவ தேசியத்தை கட்டமைக்கும் இலக்கை கொண்டிருப்பதை அவரது உரை வெளிப்படுத்துகிறது.

மதவெறி நோக்கத்தையும், மதக்கலவரத்தை விதைக்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் மோகன் பகவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாலகிருஷ்ணன், நாட்டின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சி தத்துவம், சமூக நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படைவாத அரசியல், மதவெறி நடவடிக்கைகளை எதிர்கொள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நமது நாட்டின் மாண்பை பாதுகாக்கும் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்" என கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPIM K Balakrishnan Condemn to RSS For Religion Hate Speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->