காலப் பெட்டகம் காலம் சென்றது., என்.ராமகிருஷ்ணன் மறைவு., சோகத்தில் மூழ்கிய கம்யூனிஸ்ட்.!
cpim mourning to n ramakirushnan dead
என்.ராமகிருஷ்ணன் மறைவிற்கு சிபிஐ(எம்) செவ்வணக்கம் செலுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், "கம்யூனிஸ்ட் இயக்கத்தின் காலப் பெட்டகமாக திகழ்ந்த முதுபெரும் எழுத்தாளரும், உறுதிமிக்க மார்க்சிய அறிஞருமான தோழர் என்.ராமகிருஷ்ணன் நேற்று (12.12.2021) இரவு மதுரையில் உயிரிழந்துள்ளார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 81. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தோழர் என்.ராமகிருஷ்ணன் 1960ல் மதுரையில், கம்யூனிஸ்ட் கட்சி நாளிதழான ‘ஜனசக்தி' ஏட்டின் உதவி செய்தியாளராக தனது பத்திரிகை பணியை துவக்கினார். 1964 ஏப்ரலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. 1965-66ல் என்.ஆர்.இதர தோழர்களுடன் ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தார். விடுதலையான பின் தீக்கதிர் உதவி ஆசிரியர் ஆனார். 1966ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆனார். அதன்பின் 1969 முதல் 1983 வரை 15 ஆண்டுகள் தில்லியில் கட்சிப்பணி ஆற்றினார்.
அவருக்கு வெகுகாலமாகவே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் போராட்ட வரலாறு, அதன் சாதனைகள், தலைவர்கள் மற்றும் செயல்வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுத வேண்டும் என்ற விருப்பம் இருந்து வந்தது. எனவே 1983 ஆம் ஆண்டில் தன்னை நாடாளுமன்ற அலுவலகக்குழு பணியிலிருந்து விடுவித்து தமிழ்நாட்டிற்கு திரும்பிச் செல்ல அனுமதிக்குமாறு கட்சியின் அரசியல் தலைமைக்குழுவை கேட்டுக்கொண்டார். கட்சித் தலைமையும் அதை ஏற்று அவரை விடுவித்தது.
1983 அக்டோபரில் மதுரைக்கு வந்த என்.ராமகிருஷ்ணன் ‘தீக்கதிர்' விளம்பரப் பொறுப்பாளராக சுமார் மூன்று ஆண்டு காலம் பணியாற்றினார். பின்னர் தனது முழு கவனத்தையும் எழுத்துத் துறையில் திருப்பினார். இதுவரை 76 புத்தகங்கள் தமிழில் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் 10 புத்தகங்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலிருந்து 25 புத்தகங்களும், பிரசுரங்களும் தமிழாக்கம் செய்துள்ளார். பல நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியுள்ளார். அவருடைய நூல்களை `சவுத்விஷன்', `பாரதி புத்தகாலயம்' `நியூ செஞ்சரி புத்தக நிலையம்' `கிழக்குப் பதிப்பகம்' மற்றும் `காலம் வெளியீடு' ஆகியவை வெளியிட்டுள்ளன.
“உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் - ஒரு சுருக்கமான வரலாறு” (முதல் பாகம் 1844-1917) என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதினார். அதைத் தமிழில் கொண்டு வர தீவிரமாக உழைத்து வந்தார். அவர் எழுதிய இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு முதல் பாகம் (1920 முதல் 1964 வரை) வெளிவந்துள்ளது.
`தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்' (1917-1964) என்ற நூலும் அதைத் தொடர்ந்து தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்க வரலாறு (1964-2014) என்று நூலும் வெளிவந்துள்ளது. இவை நீங்கலாக மாவட்ட வரலாறுகளையும் எழுதியுள்ளார். இது தவிர தலைவர்களின் கட்டுரைகளை தொகுத்து, முறைப்படுத்தி தொகுப்பு நூல்களாகவும் வெளியிட்டுள்ளார்.
தனது வாழ்நாள் முழுவதையும் கட்சிக்காகவும், புரட்சிகர எழுத்துக்காகவும் அர்ப்பணித்தவர் தோழர் என்.ராமகிருஷ்ணன். அவரது மறைவு தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத மிகப்பெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு செவ்வணக்கம் செலுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அஞ்சலி செலுத்துகிறது.
தோழர் என்.ராமகிருஷ்ணன் மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். அப்போது முதல் அவர் தீக்கதிர் மதுரை அலுவலகத்திலேயே தங்கி இறுதி மூச்சு வரை எழுத்துப்பணி ஆற்றினார். அவருக்கு சித்ரா என்ற மகளும், மணவாளன் என்ற மகனும் உள்ளனர். தோழர் என்.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களது உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோழர் என்.ராமகிருஷ்ணனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், தீக்கதிர் ஊழியர்களுக்கும், மதுரை மாநகர், புறநகர் மாவட்டத் தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு இதயப்பூர்வமான ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.
English Summary
cpim mourning to n ramakirushnan dead