தேர் திருவிழாவில் அமைச்சர் பங்கேற்க பாஜக எதிர்ப்பு! நல்லிணக்கத்தை சீர்குலைப்பதா! சிபிஐ(எம்) கண்டனம்! - Seithipunal
Seithipunal


மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு பொது நிகழ்வுகளில் பங்கேற்பது மிகவும் இயல்பாக உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜகவினர்  இனிமேல் தாங்களும் பொது நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார்கள் என எடுத்துக் கொள்ளலாமா? என்று சிபிஐ(எம்) கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோயில் திருவிழாவில், நேற்று தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்றார்கள்.

இந்நிகழ்வையொட்டி குமரி மாவட்ட மக்கள் மத்தியில் மத வெறுப்பை விதைக்கும் நோக்கத்துடன் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். இது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.

தமிழ்நாட்டில் ஊர் திருவிழாக்களில் பல்வேறு மதத்தினரும் பங்கெடுப்பதும், முறை செய்வதும் மிகவும் இயல்பாக இருந்து வருகிறது. இந்த நல்லிணக்க சூழல் சங்க பரிவாரத்தின் கலவர முயற்சிகளுக்கு தடையாக இருக்கிறது. அதனாலேயே அதனை கெடுப்பதற்கு பாஜக முயற்சிக்கிறது.

குமரியில் முன்பு ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ‘மத அடிப்படையில் கலவரம் நடக்கும்’ என்று மிரட்டல் தொனியில் பேசியதும், அதை அங்கு கூடியிருந்தவர்கள் ஆர்ப்பரித்து வரவேற்றதையும் பார்த்தோம். இப்போது வேளிமலை முருகன் கோயில் தேரோட்டத்தையொட்டி உருவாக்கப்படும் சர்ச்சையும், கலவர நோக்கம் கொண்ட வெறுப்பு பிரச்சாரத்தின் பகுதியே ஆகும்.

ஏற்கனவே, குமரியில் பல்வேறு கோயில் வளாகங்களை சங்க பரிவார அமைப்பினர் பயன்படுத்தி, வெறுப்பு மூட்டி வருகின்றனர். இப்போது அது வெளிப்படையாகியுள்ளது. எனவே இந்த விசயத்தில், அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு பொது நிகழ்வுகளில் பங்கேற்பது மிகவும் இயல்பாக உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜகவினர்  இனிமேல் தாங்களும் பொது நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார்கள் என எடுத்துக் கொள்ளலாமா?

தமிழ்நாட்டில் பல்வேறு தேர் திருவிழாக்களில், சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் காரணமாக பட்டியல் சாதி மக்கள் பங்கேற்பு மறுக்கப்படுகிறதே; அங்கெல்லாம் செல்ல மறுக்கும் சங்க பரிவாரங்கள், நல்லிணக்கம் நிலவும் இடங்களில் வந்து கலகம் செய்ய முயற்சிப்பது ஏன்? என்ற கேள்வியும் எழுகின்றன.

பாஜகவின் உள்நோக்கத்தை புரிந்துகொண்டு மக்கள் அவர்களை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்றும், முற்றாக புறக்கணிக்க வேண்டுமென்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது."

இவ்வாறு அந்த அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cpim say about ther thiruvizha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->