ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் - சிபிஐஎம்.!
CPIM say about transport staffs requests
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணிலா செயலாளர் கே பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26.4.2022 முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அகவிலைப்படி என்பது ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு கடந்த 2015 முதல் அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. சுமார் 6 ஆண்டு காலம் ஒரே ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இது எவ்விதத்திலும் நியாயமாற்றது. எனவே,போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயிர்வினை உடனடியாக வழங்கிட வேண்டும்.
2020 மே மாதத்திற்கு பின் மரணமடைந்த, விருப்ப பணி ஓய்வுபெற்ற ஊழியர்களது ஓய்வுகால பலன்கள் வழங்கப்படவில்லை. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடும் வழங்கப்படவில்லை. தங்களது உழைப்பின் மூலம் போக்குவரத்து கழக வளர்ச்சிக்கு பாடுபட்ட இவ்வூழியர்களது நியாயமான கோரிக்கையை அஇஅதிமுக அரசால் பல ஆண்டு காலம் மறுக்கப்பட்டு வந்துள்ளது. ஏற்கனவே தொழிற்சங்கங்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்திய போதும், அஇஅதிமுக அரசு இத்தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள அரசு தங்களது பிரச்சனைக்கு தீர்வு காணும் என அமைதியான முறையில் தங்களது கோரிக்கையை வற்புறுத்தி போராடி வருகின்றனர். ஏற்கனவே திமுக தனது தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளது.
எனவே, பல்லாண்டு காலம் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி பணி ஓய்வு பெற்று தற்போது உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி, குடும்ப சுமைகளும் அதிகரித்துள்ள நிலையில் இவர்களது நியாயமான கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
English Summary
CPIM say about transport staffs requests