ரேஷன் கடையில் முடியும்... டாஸ்மாக்கில் முடியாதா..? செந்தில் பாலாஜியை சீண்டும் சி.டி.ஆர் நிர்மல்குமார்..!!
CTR Nirmal Kumar criticized SenthilBalaji on tasmac vending machine
தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தால் சென்னையில் நான்கு எலைட் மதுபான கடைகளில் சோதனை முறையில் மதுபானம் தரும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இது குறித்தான வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டாஸ்மாக் தானியங்கி மதுபானம் தரும் இயந்திரம் குறித்து பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இதற்கு டாஸ்மாக் நிர்வாகம் அளித்த விளக்கத்தில் மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து மதுபானம் தரும் வெண்டிங் மெஷின் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இதுகுறித்து தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மார்க் நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட விளக்கத்தை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த சி.டி.ஆர் நிர்மல்குமார் "கூடுதல் விலைக்கு யார் விற்கிறார்கள்? 33,000 ரேஷன் கடைகளில் பில் மிஷின் வைத்து விற்பனை நடைபெறும் பொழுது 5,300 டாஸ்மாக் கடையில் முறைப்படுத்த முடியாதது யாருடைய தவறு செந்தில் பாலாஜி? 2017ல் வாங்கப்பட்ட பில்லிங் இயந்திரம் நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எப்படி வேலை செய்யாமல் போனது..? எனவும்.
பில்லிங் மிஷின் சரி செய்தாலே கூடுதல் விலைக்கு விற்பது தடுக்கப்படும். ஆனால் அதற்கு பதில் வெண்டிங் மிஷின் கண்டுபிடித்த நம்ம சயின்டிஸ்ட் செந்தில் பாலாஜிக்கு ஒரு வாழ்த்துக்கள் சொல்லுங்கள் மக்களே. ஆமா பழைய பில்லிங் மிஷினை எல்லாம் கரையான் அரச்சிருக்குமோ? என கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார்.
ஏற்கனவே டாஸ்மாக் வருமானம் குறித்து சி.டி.ஆர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பியதால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் நிர்மல் குமாருக்கும் இடையேயான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் டாஸ்மாக் நிர்வாகம் குறித்து நிர்மல்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். நிர்மல் குமாரின் பதிவு தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
CTR Nirmal Kumar criticized SenthilBalaji on tasmac vending machine