கூட்டணி கட்சியை போட்டுக்கொடுத்த காங்கிரஸ்! விசாரணைக்கு உத்தரவிட்ட ஆளுநர்!
Delhi Congress vs AAP
அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு பணம் கடத்தப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீக்ஷித் குற்றம் சாட்டி இருப்பது பாரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தீப் தீக்ஷித் மேலும் தெரிவிக்கையில், "பஞ்சாப் அரசின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அடிக்கடி என் வீட்டின் அருகில் சுற்றி வருகின்றனர். அவர்களது அதிகாரப்பூர்வ வாகனங்கள் என்னை கண்காணிக்க மிரட்டும் நோக்கில் செயல்படுகின்றன.
மேலும், பஞ்சாப் அரசு கோடிக்கணக்கான பணத்தை டெல்லி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அனுப்பியுள்ளது. பஞ்சாப் போலீஸ் பாதுகாப்புடன் பணம் தனியார் வாகனங்களில் அரியானா, ராஜஸ்தான் வழியாக டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது" என்று குற்றம்சாட்டி இருப்பது டெல்லி அரசியலை அதிர வைத்துள்ளது.
மேலும் இந்த குற்றச்சாட்டை அடுத்து, துணைநிலை ஆளுநர் சக்சேனா, டெல்லி போலீஸ் கமிஷனருக்கு உடனடி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பஞ்சாப் மாநில எல்லைகளில் பரிசோதனை மேற்கொள்ளவும், சட்டவிரோத பணப் பரிமாற்றங்களைக் கண்காணிக்கவும் போலீசாருக்கு கட்டளையிட்டுள்ளார்.
அதேபோல், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநில டிஜிபிக்களும் மேலும் எச்சரிக்கையுடன் செயல்படவும், தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட இண்டி கூட்டணியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சி இடம்பெற்று இருந்தாலும், தேர்தல் என்று வந்துவிட்டால் இந்த இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.