இன்று சட்டசபையில் காவல்துறை மீதான மானிய கோரிக்கை...! அனல் பறக்கும் விவாதம்...!
Demand for subsidy police assembly today heated debate
கடந்த மாதம் 14-ந் தேதி தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட்டும், 15-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 17-ந் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து, 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிற நிலையில் காலை 9.30 மணிக்கு முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இதில் கேள்வி நேரம் முடிந்ததும் காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி:
இவ்விவாதத்தில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் உரையாடுகிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான 'எடப்பாடி பழனிச்சாமி' பேச இருக்கிறார்.மேலும், தமிழகத்தில் நிலவிவரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து அவர் பேச இருப்பதால் விவாதத்தின் போது அனல் பறக்கும் என்று தெரிகிறது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின்:
இதில் அனைத்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிலளிக்கிறார். மேலும், நாளை காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியதும் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டதும், கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்துடன் சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட இருக்கிறது. மீண்டும் இந்த ஆண்டு கடைசியில் சட்டசபை கூட்டம் நடைபெறும். சுமார் ஒரு வார காலம் இந்தக் கூட்டம் நடக்கும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
English Summary
Demand for subsidy police assembly today heated debate