இட ஒதுக்கீட்டில் இடம்பெறாத பிற சாதிகளை உயர்சாதிகள் என குறிப்பிடுபவர்கள் மீது நடவடிக்கை - தமிழக அரசுக்கு அவசர கோரிக்கை!
devanathan say about reservation issue
இட ஒதுக்கீட்டில் இடம்பெறாத பிற சாதிகளை உயர்சாதிகள் என குறிப்பிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் வலியுறுத்தியிருக்கிறார்.
சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் அரங்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி தேவநாதன் யாதவ் தலைமையில் இட ஒதுக்கீட்டில் இடம்பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் எம்பியும் பாஜக செய்தி தொடர்பாளருமான கார்வேந்தன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், முன்னாள் எம்எல்ஏ நடிகர் எஸ்.வி.சேகர், யாதவ மகாசபை தேசிய அமைப்பு செயலாளர் குணசீலன் யாதவ், தென்னிந்திய பார்வார்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன் ஜி, உலக தமிழ் சைவப் பெருமக்கள் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம், பறையர் பேரவையை சேர்ந்த ஏர்போர்ட் மூர்த்தி உள்ளிட்ட பல சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
* இந்த கூட்டத்தில், இட ஒதுக்கீட்டில் இடம்பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற சாதி ஏழை மக்களுக்கு 10% இடஒதுக்கீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்.
* 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவிருக்கும் தமிழக அரசின் முடிவை கண்டிக்கிறோம்.
* இடஒதுக்கீட்டில் இடம்பெறாத பிற சாதியினரை உயர்சாதி என்றும் முற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்றும் குறிப்பிடுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அப்படி குறிப்பிடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்காக பிகார்,கர்நாடகா, ஒடிசா மாநிலங்களை போல் தமிழக அரசாங்கமும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
* இந்திய அரசாங்கம் சாதிய வாரி கணக்கெடுப்பு முறையை சட்டப்படி அமல்படுத்தி அதன் அடிப்படையில் அனைத்து சாதிகளுக்கும் சரியான விகிதத்தில் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
* சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட வலியுறுத்தி அனைத்து சமுதாய தலைவர்களும் தனிப்பட்ட முறையில் தீர்மானம் நிறைவேற்றி அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு முடிவு செய்து ஆணையம் அமைக்க முடிவு செய்தால், ஆணையத்தில் அனைத்து சாதியினருக்கும் சரியான முறையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
* பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கிரிமிலேயர் முறையை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.
சிறுபான்மை கல்வி நிறுவனம் மற்றும் மொழிவாரி சிறுபான்மை நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் தி.தேவநாதன் யாதவ், திமுகவின் கொள்கையை தமிழக அரசின் வாயிலாக திணிக்கப் பார்ப்பதாக குற்றஞ்சாட்டினார்.
10% இட ஒதுக்கீட்டால் பயன்பெறும் ரோமன் கத்தோலிக் போன்ற கிறிஸ்தவர்கள், மரைக்காயர், தாவூத் போன்ற இஸ்லாமிய பிரிவுகளையும் முதலமைச்சர் எதிர்க்கிறாரா என அவர் கேள்வி எழுப்பினார்.இட ஒதுக்கீட்டில் இடம்பெறாத சாதிப்பட்டியலில் 79 சாதிகள் இடம்பெற்றுள்ள போதிலும், அதில் உள்ள பிராமண சமுதாயத்தை மட்டும் குறிவைத்து இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் கண்டனம் தெரிவித்தார்.
English Summary
devanathan say about reservation issue