உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை தர மறுப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.. விஜயகாந்த்.!!
dmdk vijayakanth statement on apr 28
உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை தர மறுப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இருப்பினும் இங்கு அதற்கான பங்களிப்பை தரும் அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை தர மறுப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
கொரோனா காலத்தில் தங்களுடைய நலனை பெரிதாக கருதாமல் மக்களை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அயராது உழைத்து வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசிடம் இருந்து இதுவரை நிவாரணம் தரப்படவில்லை. உலகிலேயே தமிழகத்தில் தான் மருத்துவர்கள் தங்களின் சம்பளத்திற்காக பல வருடங்களாக, தொடர்ந்து போராடி வருகிறார்கள் என்பதை இந்த நேரத்தில் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம் என்பது மக்களின் சுகாதாரத்திற்கான முதலீடு தானே தவிர செலவினம் அல்ல என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ள மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களின் ஊதியத்தை விட, தமிழகத்தில் பணி செய்யும் சிறப்பு மருத்துவர்களின் ஊதியம் மிக குறைவாக இருப்பது எந்த வகையில் நியாயம்?
கிராமப்புற சுகாதார சேவையில் முதல் இடத்தில் உள்ள தமிழகத்தில், அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை தருவதற்கு அரசு மறுப்பது ஏன்?
மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது. புதிய ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடையும் நிலையிலும், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற வலி ஒவ்வொரு மருத்துவரிடத்திலும் அதிகமாகவே இருக்கிறது.
ஊதிய உயர்வை வலியுறுத்தி சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்களை தேமுதிக சார்பில் கழக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆதரவாக பேசியது நினைவுகூறத்தக்கது.
எனவே தமிழக சட்டப்பேரவையில் நாளை நடக்க உள்ள சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின்போது, 2009ல் திமுக ஆட்சியில் போடப்பட்ட அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பான அரசாணை 354 ஐ செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
dmdk vijayakanth statement on apr 28