ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை... திருமாவளவன் பரபரப்பு பேட்டி!
DMK VCK Adav Arjuna Thirumavalavan
திமுக - விசிக கூட்டணி கூட்டணியில் எந்த விரிசலும், சலசலப்பும் இல்லை என்று திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனியார் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டி திமுக - விசிக தொண்டர்களிடையே பெரும் விவாதத்துக்கு ஆளாகியுள்ளது.
குறிப்பாக ஆதவ் அர்ஜுனா, விசிக இல்லை என்றால் வடமாவட்டங்களில் திமுக வெற்றி பெற முடியாது என்றும், விசிகவுக்கு தனி வாக்கு வங்கி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் திரைத்துறையிலிருந்து வந்தவர்கள் (உதயநிதி) துணை முதல்வர் ஆகும் போது, எங்கள் தலைவர் துணை முதல்வராக கூடாதா? எங்கள் தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று நாங்கள் எண்ண கூடாதா? ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது எங்களின் நீண்ட கால கொள்கை என்று தெரிவித்திருந்தார்.
மேலும் கொடுக்கின்ற சீட்டை வாங்கி செல்லும் இடத்தில் நாங்கள் தற்போது இல்லை. அதுபோன்ற சூழ்நிலைக்கு இனி நாங்கள் வரமாட்டோம் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார்.
இது பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரே ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் இடம், ஆதவ் அர்ஜுனாவின் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வலுத்து வருகிறது, இது குறித்து உங்களின் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்க்கு திருமாவளவன், கட்சியில் உள்ள முன்னணி தோழர்கள் உடன் கட்சி விவகாரங்களை கலந்து பேசி தான் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும். பொதுச்செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர், உயர்நிலைக் குழுவில் இடம் பெற்றுள்ள தோழர்களுடன் நான் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறேன். மீண்டும் நாங்கள் கலந்து பேசி அது தொடர்பான முடிவுகளை எடுப்போம் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
மேலும், திமுக - விசிக கூட்டணி கூட்டணியில் எந்த விரிசலும், சலசலப்பும் இல்லை என்று திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
English Summary
DMK VCK Adav Arjuna Thirumavalavan