மது மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் 116.30% அதிகரித்திருப்பது நல்லதுக்கில்லை - அன்புமணி இராமதாஸ் விளாசல்.!
Dr Anbumani Ramadoss Say about Kalal TAX income hike issue
மது வணிகம் மூலமான கலால் வரி வருவாய் இரு மடங்காக உயர்ந்திருப்பது வேதனையளிப்பதாகவும், தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "2022-23 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் 52.30% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனா பாதிப்புகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீளத் தொடங்கியிருப்பதையே இது காட்டுகிறது. இந்த வளர்ச்சி தொடர வேண்டும்.
அதே நேரத்தில் மது உற்பத்தி மீதான கலால் வரி மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.1199.23 கோடியிலிருந்து ரூ.2594.55 கோடியாக 116.30% அதிகரித்திருக்கிறது. மாநில அரசின் விற்பனை வரி வருவாய் சுமார் ரூ.4000 கோடி (38.30%) அதிகரித்திருப்பதற்கும் மது வணிகம் அதிகரித்திருப்பது தான் காரணம்.
ஒரு காலாண்டில் தமிழக அரசின் வரி வருவாய் ரூ.11,662.68 கோடி அதிகரித்துள்ள நிலையில், அதில் கிட்டத்தட்ட பாதியளவு வருவாய் உயர்வு மது வணிகம் அதிகரித்திருப்பதன் மூலமாக மட்டுமே கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கவில்லை. மாறாக, வருத்தமும், வேதனையும் மட்டுமே அளிக்கிறது.
ஒரு மாநிலத்தின் மது வருவாய் அதிகரிக்கிறது என்றால், குடும்பங்கள் சீரழிவதும், விபத்து மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும், இளம் கைம்பெண்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகத் தான் பொருள் ஆகும். இது ஒரு மாநில அரசுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காது.
மது இல்லாத மாநிலம் தான் மகிழ்ச்சியான மாநிலம். மது மூலம் கிடைக்கும் வருவாயை வேறு ஆதாரங்கள் மூலம் திரட்ட முடியும். எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மது விலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say about Kalal TAX income hike issue