இதைவிட பெரிய மகிழ்ச்சி என்ன இருக்கக்கூடும்? கண்கள் கண்ட காட்சி - மருத்துவர் இராமதாஸ் உருக்கம்.!
Dr Ramadoss FB Post Bird
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பதிவு :
"திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள கல்விக் கோயில் வளாகத்திற்கு செவ்வாய் மற்றும் புதன் கிழமை நான் சென்று வந்தது குறித்தும், அங்கு நடந்த நிகழ்வுகள் குறித்தும் முகநூலில் பதிவிட்டு வருகிறேன்.
முதல் நாள் வாடியிருந்த தாவரங்கள், எனது ஆணைப்படி நீர்ப் பாய்ச்சப்பட்டதால் இரண்டாம் நாளில் மலர்ச்சி அடைந்திருந்தன. அது எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
தாவரங்களால் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி குறித்து ஏற்கெனவே பதிவிட்டுவிட்ட நிலையில், பறவைகளால் ஏற்பட்ட மகிழ்ச்சி குறித்து பதிவிடுவதற்காகத்தான் இந்த முகநூல் பதிவு.
கல்விக் கோயில் வளாகத்தின் விளையாட்டுத் திடலில் நின்று கொண்டிருந்த போது, வானில் சுமார் 8, 9 நாரைகள் ஒரே வரிசையில், ஒரே வேகத்தில் சீராக அணிவகுத்து பறந்து கொண்டிருந்தன.
இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சிகளின் போது விமானங்கள் எவ்வாறு அணிவகுத்து சாகசங்களைச் செய்யுமோ, அதே போன்று நாரைகள் அணிவகுத்துச் சென்றன. காலையில் புறப்பட்டு இரை தேட சென்ற நாரைகள், இரை தேடி உண்ட பிறகு இல்லம் திரும்பிய காட்சிதான் அது.
கடந்த காலங்களில் மாலை நேரங்களில் இந்தக் காட்சிகளை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். ஆனால், எந்திரமயமாகிவிட்ட இந்தக் காலத்தில் பறவைகளின் அணிவகுப்பைப் பார்ப்பது அரிதாகிவிட்டது.
நாரைகள் பறந்து சென்ற அடுத்த 5 நிமிடங்களில் சுமார் 15 வெண்ணிற கொக்குகள் அதேபோல் அணிவகுத்துச் சென்றன. இந்தக் காட்சிகள் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன.
கல்விக் கோயில் வளாகத்தின் இன்னொரு பகுதியில் நான் மகிழுந்தில் வந்து கொண்டிருந்த போது, நூற்றுக்கும் மேற்பட்ட கவுதாரிகள் ஒன்றாக மேய்ந்து கொண்டிருந்தன.
அவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மகிழுந்தை சற்று மெதுவாக இயக்கும்படி கூறினேன். கவுதாரிகள் கூட்டத்தைக் கண்ட மகிழ்ச்சியுடன் தைலாபுரம் தோட்டம் திரும்பினேன்.
தாவரங்களையும், பறவைகள் போன்ற உயிரினங்களையும் அவற்றின் இயல்பில் பார்ப்பதைவிட, பெரிய மகிழ்ச்சி என்ன இருக்கக்கூடும்?