மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. நடத்தும் - எச்சரிக்கை விடுத்த அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Chennai Perungudi waste issue
சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அமைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கி இருக்கிறது.
அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கும், அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "பெருங்குடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு மிக அருகில் 150 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரி உலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியல் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.
எரி உலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும். அப்போது டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு மற்றும் பியூரன் உள்ளிட்டவை வெளியாகும்.
இந்த நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். மேலை நாடுகளில் மக்கள் குப்பை எரி உலைகளை கடுமையாக எதிர்க்கின்றனர்.
சென்னை மாநகரிலும் குப்பையை எரித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமற்றது ஆகும். சென்னையில் கிடைக்கும் குப்பைகளைக் கொண்டு குப்பை எரிஉலை அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. பெருங்குடியில் குப்பை எரி உலை அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பா.ம.க. நடத்தும்" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Chennai Perungudi waste issue