அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு: கற்றல் அடைவுத் தேர்வு தேதி வெளியானது!
TN govt school
வரும் பிப்ரவரி 4 முதல் 6-ம் தேதி வரை தமிழக அரசுப் பள்ளியில் படிக்கும் 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கற்றல் அடைவுத் தேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது ஸ்லாஸ் எனும் மாநில கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவர்களுக்கு ஸ்லாஸ் தேர்வு பிப்ரவரி 4 முதல் 6-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வு, கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் நடைபெறும். வினாத்தாளில் 3-ம் வகுப்புக்கு 35 வினாக்கள், 5-ம் வகுப்புக்கு 45 வினாக்கள், 8-ம் வகுப்புக்கு 50 வினாக்கள் இடம்பெறும். இதற்கான மாதிரி வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் மூலமாக பள்ளிக்கல்வி இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.
இதை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்த வேண்டும். மாதிரித் தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகள் ஜனவரி 13, 20, 27, 30-ம் தேதிகளில் வழங்கப்படும். வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யும்போது ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.