மத்திய அரசின் ஒப்புதலுடன் இதனை உடனே உத்தரவிடுங்கள் - தமிழக அரசுக்கு இராமதாஸ் வலியுறுத்தல்!
Dr Ramadoss Say About Paddy Issue Sep 2022
மழையில் நனைந்த நெல் மூட்டைகளை விதிகளை தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் செய்திக்குறிப்பில், "தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்திருக்கின்றன. அதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தொடர் மழையை காரணம் காட்டி தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால், நெல்லை விற்கவும் முடியாமல், பாதுகாக்கவும் முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காவிரி பாசன மாவட்டங்களில் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் நெல் கொள்முதலை மீண்டும் தொடங்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளை, மத்திய அரசின் ஒப்புதலுடன், ஈரப்பத விதிகளை தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்; அதன்மூலம் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் காக்க வேண்டும்" என்று தமிழக அரசை மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Ramadoss Say About Paddy Issue Sep 2022