இது பெரும் அநீதி., வெளியான அறிவிப்பால் பெரும் அதிர்ச்சியில் டாக்டர் இராமதாஸ்.!
Dr Ramadoss Say About some issue march
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மீதான ஆண்டு வட்டி விகிதம், 2021-22 ஆம் ஆண்டில், 8.10% ஆக குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி ஒரே நேரத்தில் 0.40% குறைக்கப்பட்டிருப்பது அநீதியானது. வருங்கால வைப்பு நிதி மீது கடந்த 44 ஆண்டுகளில் இது தான் மிகவும் குறைவான வட்டியாகும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இந்தியாவில் அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அமைப்பு சார்ந்த பணியாளர்களின் ஊதியத்தில் ஒரு பகுதி வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்யப்படுவது தொழிலாளர் நலச் சட்டங்களின்படி கட்டாயம் ஆகும்.
தொழிலாளர்களிடமிருந்து எவ்வளவு விழுக்காடு தொகை பிடித்தம் செய்யப்பட்டு முதலீடு செய்யப்படுகிறதோ, அதே அளவிலான தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனமும் முதலீடு செய்யும். இந்தியாவில் வங்கிகள், அஞ்சலங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகளில் வருங்கால வைப்பு நிதியில் செய்யப்படும் முதலீட்டுக்குத் தான் அதிகமான வட்டி வழங்கப்படுகிறது என்பதால், தொழிலாளர்கள் செய்யும் முதலீட்டுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பதால், வருங்கால வைப்பு நிதி தான் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இத்தகைய சிறப்பு மிக்க வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் பெரிய அளவில் மாற்றமின்றி நிலையானதாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மாறாக, வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியை குறைப்பது தொழிலாளர்களுக்கு மிக மோசமான பாதிப்பைத் தான் ஏற்படுத்தும்.
எடுத்துக்காட்டாக ஒரு தொழிலாளரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ரூ.20 லட்சம் இருப்பதாக வைத்துக் கொண்டால், அவருக்கு 2020-21 ஆம் ஆண்டில் ரூ.1.70 லட்சம் வட்டியாக கிடைத்திருக்கும். ஆனால், நடப்பாண்டில், ரூ.1.62 லட்சம் மட்டும் தான் வட்டியாக கிடைக்கும். இதே நிலை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றால், சம்பந்தப்பட்ட தொழிலாளருக்கு ரூ. 1 லட்சத்துக்கும் கூடுதலான வருவாய் இழப்பு ஏற்படும்.
வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் குறைப்படுவதற்கு எந்த நியாயமும் இல்லை. கொரோனா வைரஸ் பரவலால் 2020-21 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தது. அப்போது கூட, வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.5% ஆகவே நீடிக்கும் என்று வருங்கால வைப்பு நிதி வாரியம் அறிவித்திருந்தது. 2020-21 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021-22 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.
அதுமட்டுமின்றி, வருங்கால வைப்பு நிதி வாரியம் பங்கு சந்தையிலும், கடன் சந்தையிலும் செய்துள்ள முதலீடுகள் மீது 15% வரை வருவாய் ஈட்டியுள்ள நிலையில், அதிலிருந்து 8.5% வட்டி கூட வழங்க மறுப்பது பெரும் அநீதி ஆகும். நடப்பாண்டிலும் 8.5% அல்லது அதற்கும் கூடுதலான வட்டி வழங்க வாரியம் தயாராக இருந்தும் கூட, 8 விழுக்காட்டுக்கும் கூடுதலான வட்டி வழங்கக்கூடாது என்று மத்திய நிதியமைச்சகம் அழுத்தம் தந்தது தான் வட்டிக் குறைப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு 6.5% மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது என்பதால் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியையும் குறைக்க வேண்டும் என்று கூறுவது நியாயமல்ல. வங்கிகளில் பெரும் பணக்காரர்களும், பெரு நிறுவனங்களும் தங்களிடம் உபரியாக உள்ள பணத்தை பாதுகாப்புக்காக வைப்பீடு செய்திருப்பார்கள். ஆனால், வருங்கால வைப்பு நிதி முதலீடுகள் அப்படிப்பட்டவை அல்ல.
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம், அவர்களின் குடும்பச் செலவுகளுக்கு போதுமானது அல்ல என்றாலும் கூட, செலவுகளை குறுக்கிக் கொண்டு தான், எதிர்கால சமூகப் பாதுகாப்புக்காக வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்கின்றனர். அதன் மீதான வட்டியைக் குறைக்கக்கூடாது.
1989-90 முதல் 2000-01 வரையிலான 12 ஆண்டுகளுக்கு வருங்கால வைப்பு நிதி மீது 12% வட்டி வழங்கப்பட்டது. தொழிலாளர்களைப் பொறுத்தவரை அது ஒரு பொற்காலம். ஆனால், அதற்கு பிந்தைய 22 ஆண்டுகளில் 3.90% வட்டி குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் ஓய்வுக்குப் பிந்தைய காலம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது என்பதையே இது காட்டுகிறது.
தொழிலாளர்களின் உழைப்பு அவர்களின் ஊதியத்திற்கும், அவர்கள் பணியாற்றும் நிறுவனத்திற்கும் லாபத்திற்கும் மட்டுமானது அல்ல... மாறாக, நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தான் அவர்கள் உழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் ஓய்வுக்குப் பிந்தைய காலத்தை, வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியை குறைத்து, நிச்சயமற்றதாக்கி விடக்கூடாது.
தொழிலாளர்களுக்கு எதிர்காலம் பாதுகாப்பானதாக அமைவதை உறுதி செய்ய அவர்களின் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.10% ஆக குறைக்கப்பட்டதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். வருங்கால வைப்பு நிதிக்கு குறைந்தது 10% வட்டி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Say About some issue march