’’தமிழைத் தேடி....’’ பயணம்! தமிழைக் காக்கத் தேவை இன்னொரு மொழிப்போர்! டாக்டர் இராமதாஸ் அழைப்பு!
Dr Ramadoss Say About Thamizhai thedi payanam 2023
தமிழைக் காக்கத் தேவை இன்னொரு மொழிப்போர்... அதற்கான தொடக்கமாக அமையட்டும் ’’தமிழைத் தேடி....’’ பயணம் குறித்து, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தாலமுத்து, நடராசன் உயிர்த்தியாகத்திற்குப் பிறகு கீழப்பழுவூர் சின்னசாமி திருச்சியில் தன்னைத் தானே தீக்கிரையாக்கிக் கொண்டதன் 60-ஆவது நினைவு நாள் இன்று.
அன்னை தமிழைக் காக்க உயிர்த்தியாகம் செய்த நூற்றுக்கணக்கான மொழிப்போர் ஈகியர்களின் நாள் இந்நாள். இந்த நாளில் அவர்களின் ஈகத்தை போற்றுவோம்!
ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஈகியர்கள் தங்களின் இன்னுயிரை ஈந்து, இந்தியிடமிருந்து மீட்டெடுத்த அன்னை தமிழின் இன்றைய நிலை வேதனையளிக்கிறது. கட்டாயப் பாடமொழியாகவும் தமிழ் இல்லை... பயிற்று மொழியாகவும் தமிழ் இல்லை. அரசு நிர்வாகத்தையும் தமிழ் ஆளவில்லை... ஆலயங்களிலும் தமிழாட்சி இல்லை!
ஒருபுறம் இந்தியும், சமஸ்கிருதமும் தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கப்படும் நிலையில், மறுபுறம் தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு அரியணையும் இல்லை; மணிமுடியும் அணிவிக்கப்படவில்லை. ’எங்கே தமிழ்?’ என்று ’தமிழைத் தேடி...’ தான் ஓட வேண்டியிருக்கிறது. இது தமிழர்களுக்கு தலைகுனிவு ஆகும்!
அன்னை தமிழை அரியணை ஏற்ற இன்னும் ஓர் மொழிப்போர் தான் இன்றைய தேவை. தமிழைக் காக்க எந்தவொரு ஈகத்திற்கும் தயாராகவே இருக்கிறேன். தமிழைக் காக்கும் போராட்டம் என்ற நெடும்பயணத்தின் தொடக்கமாக தாய்மொழி நாளில் நான் தொடங்கவுள்ள ’தமிழைத் தேடி...’ பயணம் அமையட்டும்!" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Say About Thamizhai thedi payanam 2023