#BREAKING | இனி கைது செய்யவோ, தாக்கவோ கூடாது - டாக்டர் இராமதாஸ் கடும் கண்டனம்!
Dr Ramadoss Say About TN Fisherman Arrested 06112022
மேலும் 15 தமிழக மீனவர்கள் கைது ; சிங்களப் படையினரின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், "வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
சிங்களப் படையினரால் கடந்த 27-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டு இரு நாட்கள் முன் விடுவிக்கப்பட்ட 3 மீனவர்கள் இன்னும் சொந்த ஊர் திரும்பவில்லை. அதற்குள்ளாக அடுத்த அத்துமீறல் நடந்திருக்கிறது.
மீனவர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக அரசும், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் கண்டித்து வருகின்றன; இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். அதற்குப் பிறகும் தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு இந்திய அரசு எப்போது முடிவு கட்டப் போகிறது?
இப்போது கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும், ஏற்கனவே சிறைபட்ட 7 பேரையும் உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை இனி கைது செய்யவோ, தாக்கவோ கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Say About TN Fisherman Arrested 06112022