சமூகநீதியை வஞ்சகர்கள் நினைத்தால் சிலுவையில் அறையலாம். ஆனால்.., பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி!
Dr Ranadoss Wish Easter 2022
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட வேண்டும் என்று போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் வாழ்த்துச் செய்தியில், "ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி, அனைத்து மக்களுக்கும், அனைத்து நன்மைகளும் நடக்க வேண்டிய நேரத்தில் நிச்சயமாக நடந்தே தீரும் என்பது உறுதி.
இயேசுவின் உயிர்த்தெழுதல் நமக்கு சொல்லும் பாடங்கள் ஏராளம். உண்மையையும், நேர்மையையும், உழைப்பையும், சமூகநீதியையும் வஞ்சகர்கள் நினைத்தால் சிலுவையில் அறையலாம். ஆனால், அவற்றை அதிக காலத்திற்கு அடைத்தோ, மறைத்தோ வைக்க முடியாது; அவை மிகவும் விரைவாக உயிர்த்தெழும் என்பது தான் ஈஸ்டர் திருநாள் சொல்லும் செய்தியாகும். தமிழ்நாட்டு மக்களாகிய நாம் இழந்த உரிமைகள், பெறத் தவறிய வெற்றிகள் ஆகியவற்றுக்கும் ஈஸ்டர் திருநாள் சொல்லும் செய்தி நிச்சயமாக பொருந்தும்.
தமிழகம் என்றால் வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்பட வேண்டும். மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும். அவற்றுக்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அதை உறுதி செய்ய இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த ஈஸ்டர் திருநாளில் தமிழக மக்கள் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்"
இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ranadoss Wish Easter 2022