யார் உங்கள் நண்பர்.. ஆருத்ரா நிறுவனமா..? அண்ணாமலையை கலாய்த்த காயத்ரி ரகுராம்..!!
Gayathri Raghuram criticized annamalai
சென்னையில் இன்று ரஃபேல் வாட்ச் ரசீது மற்றும் திமுக தலைவர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுவதற்கான நிகழ்ச்சி பாஜக சார்பில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை ஒரு சாமானியன் அரசியலில் இருப்பது மிகக் கடினமான ஒன்று. எந்த சாமானியனாக இருந்தாலும், அதுவும் முதல் தலைமுறை சாமானியனாக இருந்தால் அவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் எண்ணற்றவை. அவர்களுக்கு யாரும் பாதையை போட்டு தரவில்லை.
ஒவ்வொரு சாமானியனுக்கும் தனது சொந்த பாதையை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அது அரசியலாக இருந்தாலும் சரி, பத்திரிக்கையாளராக இருந்தாலும் சரி, தொழிலதிபராக இருந்தாலும் சரி அனைவருக்கும் பிரச்சனைகள் உள்ளது. எனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியல்வாதியாக இருந்தது கிடையாது. என்னை கரம் பிடித்து அரசியலுக்கு அழைத்துச் செல்ல எனது குடும்பத்தில் யாரும் இல்லை.
ஒரு மாதத்திற்கு அரசியல்வாதியாக பல லட்சம் ரூபாய் எனக்கு செலவாகிறது. ஒரு கட்சியின் மாநில தலைவராக எனக்கு 7 முதல் 8 லட்சம் ரூபாய் மாதம் செலவாகிறது. இதனை சுற்றி இருக்கக்கூடிய நண்பர்களின் உதவி, சுற்று இருக்கக்கூடிய கட்சியினரின் உதவியை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். எனது மூன்று உதவியாளர்களுக்கான சம்பளத்தை எனது மூன்று நண்பர்கள் கொடுக்கின்றனர். எனது காரின் டீசல் செலவை கட்சி கொடுக்கிறது.
எனக்கு பாதுகாவலர்களாக வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த பிறகு பெரிய வீட்டிற்கு மாறியதால் அதற்கான வாடகையும் அதிகரித்துள்ளது. எனவே முதல் தலைமுறை அரசியல்வாதிகளுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை பல நல்ல நபர்களின் உதவியோடு தான் அரசியல் வாழ்க்கை நகர்கிறது.
வீட்டு வாடகை ஒரு நண்பர் கொடுப்பார், நான் பயணிக்கும் கார் ஒரு நண்பரின் பெயரில் உள்ளது. என்னைச் சுற்றி இருக்கும் நல்ல எண்ணம் கொண்ட நபர்களின் உதவியோடு வாழ்க்கை போய்க் கொண்டு இருக்கிறது பேசி இருந்தார். அண்ணாமலையின் இத்தகைய பேச்சுக்கு நடிகையும் சமீபத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவருமான காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "It is called collection. தமிழில் வசூல் என்று அழைக்கப்படுகிறது. Who is your friend Arudhra gold company?" என கேள்வி எழுப்பி உள்ளார். அதாவது அண்ணாமலை தனக்கு நண்பர்கள் உதவியதாக பேசியதை "யார் அந்த நண்பர்கள், ஆருத்ரா நகை கம்பெனியா? என கேள்வி எழுப்பி கலாய்த்துள்ளார். சமீபத்தில் ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் பல பாஜக நிர்வாகிகள் சிக்கிவரும் நிலையில் காயத்ரி ரகுராம் இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Gayathri Raghuram criticized annamalai