ஆதவ் அர்ஜுனா வர விரும்பினால் பரிசீலிப்போம் ..பாமக ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி!
If Aadhav Arjuna wants to come we will consider it PMK GK Mani Interview
திருவள்ளூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கௌரவத்தலைவர் ஜி.கே.மணி, "விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா பாமகவில் இணைய விரும்பினால் பரிசீலிப்போம்" என்று தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து கூறிவருவதாக அவர் மீது அவரது சொந்த கட்சியினரே புகார் கூறி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கள் தமிழக அரசியலில் பேசும் பொருளாக மாறின. மேலும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சிக்கு நெருடலான சூழலை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஆதவ் அர்ஜூனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து அக்கட்சியின் உயர்மட்ட குழு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனாவை விசிக கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்வதென முடிவெடிக்கப்பட்டதாக தெரிகிறது.
இது குறித்து விசிக சார்பில் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆதவ் அர்ஜூனா விசிக கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-1. கட்சியின் துணை பொதுச்செயலாளர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரியவந்தது.
2. இது குறித்து கடந்த 7-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள்,மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீநான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
6. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்து வந்த ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக நேற்று அறிவித்தார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், திருவள்ளூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கௌரவத்தலைவர் ஜி.கே.மணி, "விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா பாமகவில் இணைய விரும்பினால் பரிசீலிப்போம்" என்று தெரிவித்தார்.
முன்னாக தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள போதிலும், தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்ததற்காக விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
If Aadhav Arjuna wants to come we will consider it PMK GK Mani Interview