விடியலோ விடியல்! போஸ்டர் அடித்த நாதக நிர்வாகியை கைது செய்ய, வாசலில் சேர் போட்டு அமர்ந்த போலீஸ்!
Katpadi NTK Viral Poster
தமிழக அரசு வழக்கமாக பொங்கல் தினத்தன்று வழங்கக்கூடிய பரிசு தொகுப்பில் இந்த வருடம் ஆயிரம் ரூபாய் வழங்காதது தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இதேபோல் நாம் தமிழர் கட்சியும் கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்த நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி விக்னேஷ் என்பவர், பொங்கல் பரிசு குறித்து திமுக அரசை விமர்சித்து ஒட்டிய சுவரொட்டிக்காக, அவரை கைது செய்ய போலீசார், பூட்டப்பட்டிருக்கும் அவர் என் வீட்டின் வாசலில் சேர் போட்டு உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சர்ச்சைக்குரிய அந்த போஸ்டரில்,
"பொங்கல் பரிசு தொகை 5000 ரூபாய் எங்கே?
உரிமையும் இல்லை!
தொகையும் இல்லை!
பொங்கலுக்கு பணமும் இல்லை!
விடியலோ விடியல்!
பொங்கலோ பொங்கல்!" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர் துரைமுருகன், "தேர்தல் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் தலைவரே" என்று தெரிவிக்க, அதற்கு முதல்வர் ஸ்டாலின் உஸ் (வாயை மூடுங்கள்) என்பது போன்ற புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையே, போலீசார் அவரை கைது செய்யவில்லை என்றும், போஸ்டரை யார் அடிக்க சொன்னது என்று விசாரித்துவிட்டு அனுப்பியதாக தெரியவந்துள்ளது.