கிருஷ்ணகிரி கொடூரம்: என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? உச்சகட்ட கொந்தளிப்பில் அண்ணாமலை!
Krishnagiri school girl harassment BJP Annamalai DMK MK Stalin governmentKrishnagiri school girl harassment BJP Annamalai DMK MK Stalin government
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில், 13 வயது அரசுப் பள்ளிச் சிறுமி, பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
ஆசிரியர்களே மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது, ஒரு சமூகமாக, நாம் மிகப் பெருமளவில் தோல்வியடைந்திருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரியது.
இளம்சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதாக, தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும், 13 – 19 வயதுக்குட்பட்ட 14,360 குழந்தைகள், கர்ப்பம் தரித்துள்ளனர். இது, 2023 ஆம் ஆண்டை விட, சுமார் 35% அதிகம். பள்ளிக் குழந்தைகளுக்குப் போதுமான விழிப்புணர்வு இல்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய குழந்தைகள் நல வாரியம், குறைந்தது 10 மாவட்டங்களில் முற்றிலுமாகச் செயல்படவில்லை. 15 மாவட்டங்களில், போதுமான உறுப்பினர்கள் இல்லை.
பெண் குழந்தைகள் நலனுக்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், மத்திய அரசின் கிஷோரி சக்தி யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால், இவை எதையும், தமிழகப் பள்ளிகளில் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. ஒரு புறம் பெருகி வரும் பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் புழக்கம், மற்றொரு புறம், அவற்றைக் கட்டுப்படுத்தும் அரசு அமைப்புகளைச் செயல்படாதவண்ணம் முடக்கி வைப்பது என, நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வியடைந்திருக்கிறது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகப் பணி நீக்கம் செய்ய துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், குழந்தைகள் நல வாரியத்துக்கான உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
Krishnagiri school girl harassment BJP Annamalai DMK MK Stalin governmentKrishnagiri school girl harassment BJP Annamalai DMK MK Stalin government