கொழுந்து விட்டு எரியும் இலங்கை.. குடும்ப ஆட்சிகளுக்கு எச்சரிக்கை.. கிருஷ்ணசாமி.!! - Seithipunal
Seithipunal


கொழுந்து விட்டு எரியும் இலங்கை, குடும்ப ஆட்சிகளுக்கு எச்சரிக்கை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்டை நாடான இலங்கையில் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக பெட்ரோலிய பொருட்கள், பால் பொருட்கள் முதல் அனைத்து பொருட்களுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டது மட்டுமின்றி அபரிமிதமான விலையேற்றத்தின் காரணமாக அந்நாட்டு மக்கள் அல்லல்படுவது; அவதிப்படுவது குறித்து அறிந்து நாம் வருத்தப்பட்டது மட்டுமின்றி மொழி, இன பேதமின்றி இந்திய மக்கள் அவர்களுக்கு உதவிட வேண்டும் என முதல் முதலாகக் குரல் கொடுத்தோம்.

ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறையால் ஏற்பட்ட பாதிப்புகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரக்கூடிய வகையில் துவக்கத்தில் ஆங்காங்கே சில மென்மையான போராட்டங்களை மட்டுமே நடத்தி வந்த இலங்கை மக்களின் போராட்ட வடிவம் தற்போது அதிதீவிரமாகி இருக்கிறது. கடந்த நான்கைந்து தினங்களாக மக்கள் திரண்டு எழுந்து ராஜபக்சே குடும்பத்தினரின் வீடுகளுக்கு தீ வைத்து சாம்பல் ஆக்குகிறார்கள். பலநாள் பதவியை விட்டு இறங்க மறுத்த மஹிந்த ராஜபக்சே பதவி விலக நேர்ந்துள்ளது. இப்பொழுது பிரதமருக்கான இல்லத்தில் கூடக் குடியிருக்க முடியாமல் கப்பற்படை தளத்தில் உள்ள பதுங்கு குழியில் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சே, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, அவருடைய சகோதரர்கள் மற்றும் அமைச்சரவையிலும் ஆட்சி - அதிகாரத்தின் உயர்நிலையில் உள்ள அவரது உற்றார் உறவினர்கள் 40க்கும் மேற்பட்டோரின் இல்லங்கள் குறி வைக்கப்பட்டுச் சூறையாடப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் வருகின்றன. ’அளவு மாற்றங்கள்தான் குண மாற்றங்களை நிகழ்த்தும்’ என்பது பௌதிக மற்றும் ரசாயனத்தில் உள்ள விதிகள் ஆகும். அது சமூகத்திற்கும் சாலப் பொருந்தும் என்பது இலங்கையில் நடந்து வரக்கூடிய இன்றைய சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நிலவிவரும் பணவீக்கமும் பொருளாதார நெருக்கடியும் தங்களுக்கு எதிராகத் தான் போய் முடியும் என்பதை ராஜபக்சே குடும்பம் சிறிதும் கூட எண்ணிப் பார்க்க வாய்ப்பில்லை. குடும்ப ஆட்சி முறைகளையும் ஊழல் ஆட்சியாளர்களையும் மக்கள் துவக்கத்தில் கண்டும் காணாமல் தான் இருப்பார்கள். ஆனால் தங்களுக்கான அவலங்கள் எல்லா அதிகாரங்களையும் தங்களது குடும்பத்திற்குள்ளேயே வைத்திருக்கக்கூடிய ஆட்சியாளர்களாலும், அவர்களின் மிதமிஞ்சிய ஊழல்களாலும் தான் என்பதை உணர்கின்றபொழுது கண்மூடிக் கண் திறப்பதற்குள் மக்கள் கொதித்து எழுவார்கள் என்பதற்கு உலகத்தில் பல்வேறு நாடுகளில் பல்வேறு காலகட்டங்களில் நடந்த புரட்சிகளே பெரும் சான்றுகளாகும். அதன் தொடர்ச்சியே இலங்கை சம்பவமும் ஆகும்.

பேச்சு, கருத்து, எழுத்துச் சுதந்திரத்தை மட்டுமே வலியுறுத்தி நடந்தது அல்ல 1800-களில் பிரஞ்சு புரட்சி. அது குடும்ப ஆட்சியாளர்களை - ஊழல் பெருச்சாளிகளை கில்லட்டின் இயந்திரத்திற்கு இரையாக்கினார்கள். 1907 மற்றும் 1917-களில் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சி உலகத்தை வேறொரு பாதைக்குத் திரும்பிச் சென்றது. பெரும்பாலான நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள் அனைத்துமே சர்வாதிகார மற்றும் பாசிஸ்டு எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகவும், ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராகவும் பல தலைமுறைகளாக ஆட்சிக் கட்டிலை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு இருப்பவர்களுக்கும் எதிராகத்தான் நடைபெற்றுள்ளது.

இலங்கை ஒரு அருமையான தேசம். சீதோஷ்ண நிலையில் மட்டுமல்ல, அழகிய கடற்கரைகள், மலைகள், நதிகள், வரலாற்றுச்சின்னங்கள் எனக் காண்போர் நெஞ்சைக் கவரும் ஒரு உன்னதமான பூமி அது. உலகில் மனித குலம் தோன்றிய இடம் அது என்று கூட ஒரு காலத்தில் கருத்து கூறப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு வரையிலும் கூட தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் மனிதவள மேம்பாட்டில் முதன்மையாக இருந்த நாடு இலங்கை. 92 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் தரமான கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள். உலகத்தின் பெரும்பான்மையான நாடுகள் போர்ச்சுக்கல், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டபொழுது இலங்கையும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இலங்கை ஆங்கிலேயரின் நிர்வாகத்தின் கீழ் வந்தபிறகு, இலங்கையின் மலையகப் பகுதிகளில் தேயிலை மற்றும் காபி தோட்டங்களை உருவாக்குவதற்காக தமிழகத்திலிருந்து தேவேந்திரகுல வேளாளர்களும் ஆதிதிராவிடர் மக்களும் கட்டாயப்படுத்தி அழைத்துச்  செல்லப்பட்டார்கள். இன்றும் கூட 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பூர்வீக தமிழ்மக்கள் மலையகப் பகுதிகளில் தங்களுடைய பூர்வீக அடையாளங்களை இழந்து அங்கு வாழ்கிறார்கள். இன்னும் 5 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்குக் குடியுரிமையும் இல்லை; வாக்குரிமையும் இல்லை.

1948இல் இலங்கைக்குச் சுதந்திரம் கொடுத்தது மட்டுமல்ல, ஆங்கிலேயர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாகவே ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தி அதன்மூலம் ஆட்சி - அதிகாரத்தை உருவாக்கிக் கையிலேயே ஒப்படைத்துச் சென்றார்கள். இலங்கையில் விகிதாச்சார தேர்வு முறையிலான ஜனநாயக முறையே அமலிலிருந்து வருகிறது. ஸ்ரீ மாவோ பண்டாரநாயகா என்ற பெண்மணியை முதன்முதலாக பிரதமராக தேர்ந்தெடுத்து உலகிற்கே வழிகாட்டிய தேசம் அது. ஜனநாயகத்திற்கு மிக வலுவாக அடித்தளமிட்ட அந்தத் தேசம் காலப்போக்கில் பண்டாரநாயக மற்றும் ராஜபக்சே ஆகிய இரண்டு குடும்பங்களின் கையில் சிக்கியது. பண்டாரநாயக குடும்பம் ஆட்சியிலிருந்தபோது இரண்டு புரட்சிகள் அந்த நாட்டிலே தோன்றியது. ஒன்று கியூபாவின் புரட்சியை முன்னெடுத்த சேகுவாரா இயக்கம் இலங்கை முழுவதையும் பற்றிக்கொண்டு 1971-72களில் மிகப்பெரிய அளவிற்கு மாணவர்கள் இலங்கை அரசைக் கைப்பற்றக்கூடிய சூழல் உருவாயிற்று. 2009-10ல் ஈழத்தமிழர்கள் போராட்டத்தை எப்படி பன்னாட்டு உதவியுடன் ஒடுக்கினார்களோ அதேபோலதான் அந்த சோசலிச புரட்சியும் ஒடுக்கப்பட்டது. அதேபோல 1972 இல் தமிழ்மொழி பேசும் தமிழ் மக்களைத் தனிமைப்படுத்தவும், ஒடுக்கவும் செயல்கள் துவங்கின.

1984-ல் யாழ்ப்பாணம் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அதனுடைய தொடர்ச்சியாக, 20 ஆண்டுகள் நடைபெற்ற விடுதலைப்புலிகளின் போராட்டம் 2010-ல் ஒடுக்கப்பட்டது. பண்டார நாயக்க குடும்பத்தைச் சேர்ந்த சந்திரிகா பதவியிலிருந்து இறங்கிய பின்னர் ஜெயவர்த்தனே போன்றவர்கள் பதவி வகித்தார்கள். ஆனால் கடந்த 15 வருடங்களாக ராஜபக்சே குடும்பமே இலங்கையின் ஜனாதிபதி பதவி, பிரதமர் அமைச்சர் பதவிகள், சபாநாயகர் பதவிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுச் செயலாளர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் என முக்கியமான பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். அதுமட்டுமல்ல ஆட்சி - அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்து துறைகளிலும் அளவற்ற ஊழல், எல்லாவிதமான மதுபான ஆலைகளையும் ஆளும் ராஜபக்சே குடும்பத்தினருக்குச் சொந்தமாகவே வைத்துக் கொண்டனர். மக்களுடைய வரிப் பணத்தைக் கோடி கோடியாக எடுத்து வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு நாடுகளில் முதலீடுகள் செய்தனர். அதனால் அவர்களை யாரும் அசைக்க முடியாது; அவர்களுடைய குடும்ப ஆட்சிதான் தொடரும் என்ற மதமதப்பில் மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் ஆட்சி-அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களுடைய குடும்பத்தை வளப்படுத்திக் கொள்வதிலும் சுய விளம்பரத்திலும் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்.

மக்களுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தாங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்காக நாள் கணக்கில் நிற்க வேண்டிய அவல நிலை, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 300 முதல் 500 வரை வாங்க வேண்டிய சூழல்கள்,  ஒரு ரொட்டியை ரூபாய் 1000 கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக்கும் தள்ளப்பட்டதற்கு ராஜபக்சே குடும்பமும் - குடும்ப ஆட்சியும் தான் காரணம் என்பதை உணர்ந்து  பொறுமை இழந்திருக்கிறார்கள். எனவே, இன்று இலங்கை மக்களுக்குத் தீர்வு வேண்டுமெனில் அந்தக் குடும்பம் ஆட்சி - அதிகாரத்தை விட்டு முழுமையாக அகல வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த நான்கு மாத காலமாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்த மக்கள் இப்பொழுது அனைத்து அதிகாரங்களையும் தங்களுடைய கைகளில் எடுத்துக் கொண்டுள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, ஆப்பிரிக்கா நாட்டிலும் இதே போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. எகிப்து அருகே உள்ள துனிசியா என்ற நாட்டில் சிறிய அளவில் தோன்றிய போராட்டம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மாற்றியது. 30 வருடங்களுக்கு மேலாக ஆட்சியிலிருந்த எகிப்து அதிபர் முபாரக் பதவியிலிருந்து இறக்கப்பட்டது மட்டுமல்ல, கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டார். சிரியாவில், லிபியாவில், தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன; குடும்ப ஆட்சி அதிகாரங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன.

இலங்கை மக்கள் தங்களுக்கு உணவு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்ற ஆதங்கம் இருந்தாலும்கூட அந்த மக்கள் கிளர்ந்தெழுந்து, ஒரு அநியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கத் துணிந்து நிற்கிறார்கள் என்பதே ஆச்சரியமளிக்கிறது. அங்கு நடக்கக்கூடிய போராட்டங்கள் யாரோ வெளியிலிருந்து தூண்டிவிட்டதாகவோ அல்லது நவீன கால அரசியலைப் புரியாதவர்கள்  முன்னின்று நடத்துவதாகவோ கருத இயலாது. இலங்கையில் மிகப்பெரிய அரசியல், பொருளாதார மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று எண்ணக்கூடிய இளைஞர்களாலும் முதிர்ச்சி பெற்ற சிந்தனையாளர்களாலும் மட்டுமே இது நடத்தப்படுவதாகத் தெரிகிறது.

ராஜபக்சே குடும்பத்தின் சிங்களப் பேரினவாத ஆட்சியின்கீழும்; அதற்கு முன்னரும் தங்களுக்கு அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக இழைக்கப்பட்ட கொடுமைகள் காரணமாக இப்பொழுது கொழும்பிலும் கண்டியிலும் நடந்து வரக்கூடிய போராட்டங்களிலிருந்து தமிழ் மக்கள் சற்று ஒதுங்கி இருப்பதாகவே தெரிகிறது. ஈழத் தமிழ் மக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய அரிய சந்தர்ப்பமாகவே கருத வேண்டியிருக்கிறது. எந்த ராஜபக்சே குடும்பம் தங்களுடைய அரசியல் மற்றும் குடும்ப லாபத்திற்காக சிங்கள பேரினவாதத்தைப் பயன்படுத்தினார்களோ இப்பொழுது அவர்களுடைய வீடுகள் மட்டுமல்ல, அவர்களுடைய அரசியல் சித்தாந்தங்களும் அவர்களுடைய ஊழல் சாம்ராஜ்யமும் அதே சிங்கள மக்களால் தீயிட்டுக் கொளுத்தப் படுகின்றன. இந்த நேரத்தில் ஈழத் தமிழ் மக்களும் அங்கே இருக்கக்கூடிய இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் பிற சிறுபான்மையினரும் பெரும்பான்மை சிங்களர்களுடன் ஒருங்கிணைந்து அனைவருக்குமான ஒரு தேசிய அரசாங்கத்தை உடனடியாக உருவாக்குவதற்குப் போராடுவதே தீர்வாக இருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது. அங்கு நடக்கும் அப்பெரும் போராட்டத்தில் தமிழர்கள் கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளாவிட்டாலும் அங்கு ஆட்சி மாற்றம் நிகழ்வது உறுதியாகிவிட்டது. அந்த ஆட்சி மாற்றத்தில் பங்கு கொள்ளவில்லை எனில் அதைப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் தமிழ் மக்களை ஒதுக்கக்கூடிய சூழல்கள் உருவாகும். எனவே, அங்கு சிங்களர்களும், தமிழர்களும், சிறுபான்மையினரும் ஒருங்கிணைந்து, ஒற்றை சிந்தனையோடு  செயல்படுவதே இலங்கையில் இனிமேல் குடும்ப ஆட்சி - ஊழல் அல்லாத ஜனநாயக ரீதியான அனைத்து பிரிவினருக்கான equality - equity சமத்துவ, சமய ரீதியான அரசாங்கம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படும்.

குடும்ப - ஊழல் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்நிகழ்வுகளை இலங்கையோடு மட்டும் தனித்துப் பார்க்கக் கூடாது. இந்தச் சம்பவங்கள் இலங்கையோடு மட்டும் நின்றுவிடும் என்றும் எண்ணி விடக் கூடாது. அது உலகத்தின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் பொருந்தும்; அது குறிப்பாக தமிழகத்திற்கும் பொருந்தும். ’நிலப்பிரபுத்துவ ஆட்சி முறைகள் இருக்கக் கூடாது; பரம்பரை மன்னராட்சி இருக்கக் கூடாது’ என்று தான் உலகத்தில் பெரும்பாலான புரட்சிகள் ஏற்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையிலேயே ஜனநாயக ஆட்சியில் நாடாளுமன்றம் முறைகள் வழக்கத்திற்கு வந்திருக்கின்றன. ஆனால், இந்த நாடாளுமன்ற - ஜனநாயக முறைகளைப் பயன்படுத்திக்கொண்டு அப்பன் முதலமைச்சர், மகன் முதலமைச்சர், பேரன் முதலமைச்சர் எனத் தலைமுறை தலைமுறைகளுக்கும் பதவிகளைப் பட்டா போட்டுக் கொள்வதையும், ஆட்சி - அதிகாரத்தைப் பயன்படுத்தி திரைத்துறை, ரியல் எஸ்டேட், செய்தி ஊடகத்துறை, மதுபான உற்பத்தியென அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த நினைப்பதும், குடும்ப ஆட்சிமுறையை நிரந்தரமாக நிலைகொள்ளச் செய்துவிடலாம் என்ற எண்ணம் துவக்கத்தில் நல்லதைப் போலத் தோன்றும். ஆனால், அது காலப்போக்கில் இலங்கையில் நிகழ்ந்த நிகழ்வாகவே முடியும்.

500 ரூபாய் கொடுத்துப் பெற்ற வெற்றியை அரசியல் வெற்றியாகக் கருதிக் கொண்டு இருப்பவர்களின் கனவுகளெல்லாம் கலையும். உண்மையான விடிவுகாலம் தமிழகத்திற்கு விரைவில் வரும். இலங்கையில் பற்றி எரியும் நெருப்பு அது வெறும் கட்டிடங்களுக்கானது அல்ல. குடும்ப ஆட்சி முறைக்கு எதிராகவும், ஊழல் சாம்ராஜ்யத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்திற்கு விரோதமானதற்கும் எதிராக நடத்தக்கூடியவையே ஆகும். ’மாறும், இங்கு மாறும் எல்லாம் மாறும்’ என்ற விதியைத் தவிர, எல்லாமே மாறும் ந தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnasamy statement for srilanka issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->