ராகுல் காந்திக்கு கே.எஸ். அழகிரி நன்றி.!
KSAzhagiri Statement on Rahul Gandhi Speech
மக்களவையில் மிகவும் ஆவேசமாக பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிப்தலைவர் கே.எஸ். அழகிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் ஆற்றிய உரை மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா என்ற கருத்தை வலியுறுத்தியதோடு பாரதிய ஜனதா கட்சி தனது வாழ்நாளில் தமிழகத்தை ஆள முடியாது என்று ஆவேசமாக பேசி இருக்கிறார்.
மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி கூறியிருக்கிறார். இதன்மூலம் கூட்டாட்சி தத்துவத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார். இக்கருத்தை கூறியதற்காக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் வரவேற்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
மக்களவையில் திரு. ராகுல் காந்தி அவர்கள் தமிழகத்தைப் பற்றிக் குறிப்பிட்டு பேசியது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, நான் ஒரு தமிழன் என்று பதில் கூறி இருப்பது, எட்டுக் கோடித் தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறது. இந்தியாவிலுள்ள பன்முக கலாச்சாரத்தை மதிப்போடு வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற வகையில் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இத்தகைய கருத்தை மக்களவையில் மிகுந்த எழுச்சியோடு கூறியதை குறிப்பிட்டு, தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்து வரவேற்று இருக்கிறார்.
தேசிய அளவில், தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கூறிய கருத்துக்கு, தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருக்கின்ற முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தமது நன்றியை வெளிப்படுத்தியிருப்பது மதச்சார்பற்ற சக்திகளுக்கு மிகுந்த வலிமையை வழங்கும் என்பதை உறுதியோடு கூற விரும்புகிறேன்.
தமிழக மக்கள் பெருமைப்படுகின்ற வகையில், மக்களவையில் உரையாற்றிய தலைவர் ராகுல்காந்தி அவர்களையும், அந்த உரைக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களை பாராட்டி பெருமைப்படுவதோடு, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
KSAzhagiri Statement on Rahul Gandhi Speech