மக்களவைத் தேர்தல் : வாக்கு எண்ணும் மையத்திற்குள் கத்தியுடன் நுழைந்த வேட்பாளர்..!
Loksabha Election Candidate Came with Knife to Vote Counting Centre
தற்போது நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையுடன் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையும் நாகர்கோவிலில் உள்ள கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளுடன் சில சுயேச்சை வேட்பாளர்களும் சேர்ந்து மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வாக்கு எண்ணும் நாளான இன்று வாக்குச்சாவடி முகவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் காலை தீவிர சோதனைக்குப் பின்னர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலை பகுஜன் திராவிர் கழக சுயேச்சை வேட்பாளர் ராஜன்சிங் என்பவர் தனது இடுப்பில் உறையுடன் கூடிய கத்தியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்துள்ளார். இதைப் பார்த்த போலீசார் அவரை நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அவருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து ராஜன்சிங் "எங்களது சிங் மரபுப்படி எப்போதும் உறையுடன் கூடிய கத்தியை இடுப்பில் வைத்திருப்போம். எந்த விதமான அரசு நிகழ்ச்சிகளிலும், தேர்தல் நடத்தை விதிகளிலும் எங்களுக்கு இதற்கு அனுமதி உண்டு. வடமாநில சிங் வேட்பாளர்கள் இதை பின்பற்றி வருகின்றனர். ஆனால் கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்தில் என்னை அனுமதிக்காதது வருத்தமளிக்கிறது" என்று கூறியுள்ளார்.
English Summary
Loksabha Election Candidate Came with Knife to Vote Counting Centre