போராட்டம் எதிரொலி : தமிழகத்தில் பேருந்துகள் ஓடுமா? வெளியான பரபரப்பு தகவல்.!
march strike issue
வருகிற 28 மற்றும் 29-ந்தேதிகளில் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.
ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளன.
தற்போதுவரை வெளியான தகவலின்படி, இந்த வேலை நிறுத்தத்தில் வங்கிகள், எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்கின்றன. மொத்தமாக 25 கோடி பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க கூடும் என்று தெரிகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. இப்போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறது. இதில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.
அதே சமயத்தில், “நோ ஒர்க் நோ பே” என்ற அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்கவும் தமிழக அரசு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவிக்கையில், "மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதனை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர்.
இந்த போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கும் அதே நேரத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடக்கும் 2 நாட்களும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.