புதியக் கல்விக் கொள்கை.. மதிமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்.. வைகோ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கு நுழைவுத்தேர்வு - புதியக் கல்விக் கொள்கை திணிப்பை கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில் ஏப்ரல் 7 அன்று திருவாரூரில் ஆர்ப்பாட்டம் என வைகோ அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக் கழகங்களில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இளநிலைப் படிப்புகளில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, பல்கலைக்கழக மானியக் குழு கடந்த மார்ச் 20 ஆம் தேதி அன்று அறிவித்து உள்ளது.

இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத் தளம் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து செயல்பாட்டுக்கு வருகின்றது. இந்த ஆண்டுக்கான பொது நுழைவுத் தேர்வு ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கணினி வழியில் மூன்றரை மணிநேரம் நடைபெறும் இந்தத் தேர்வில், அனைத்து வினாக்களும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேட்கப்படும். எனவே, மாணவர்கள் என்சிஇஆர்டி பாட நூல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று யூ.ஜி.சி தெரிவித்து உள்ளது. அத்துடன், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு இந்த நுழைவுத் தேர்வில் எந்த மதிப்பும் தரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்று பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை மதிப்பற்றதாக ஆக்கி, மாநில அரசின் கல்வி முறையை மதிப்பில்லாமல் ஆக்கும் இந்த நுழைவுத் தேர்வின் மூலம், மீண்டும் புதியக் கல்விக் கொள்கையை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய பா.ஜ.க அரசு ஈடுபட்டு உள்ளது. மேலும், இந்தத் தேர்வை மற்றக் கல்லூரிகளும், தனியார் பல்கலைக்கழகங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு தடுக்கப்படும்.

சமூக நீதிக்கு எதிரான இந்தப் பொது நுழைவுத் தேர்வை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து, மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக, மறுமலர்ச்சி தி.மு.க இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில், மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் திருவாரூரில் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர் ப.பாலச்சந்திரன் தலைமையில், இளைஞர் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் ஆகியோரது ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அரசியல் ஆய்வு மைய செயலாளர் மு.செந்திலதிபன் சிறப்புரை ஆற்றுவார்.தஞ்சை மண்டல கழகத் தோழர்கள், அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mdmk protest on apr 7


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->