அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுக - மநீம.!
mnm say about tn govt transport staff issue
மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் R. தங்கவேலு இன்று விடுத்துள்ள அறிக்கையில், "அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் தீர்ப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக 300 நாட்களைக் கடந்த பின்னரும் கண்டுகொள்ளவில்லை. அதிருப்தியில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகளும் போராட்டத்தில் இறங்கின. திமுகவின் சொந்த தொழிற்சங்கமான ‘தொழிலாளர் முன்னேற்ற சங்கமும்’ திமுக அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உறுதி செய்தல், 2003-ஆம் ஆண்டிற்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களைப் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைத்தல், பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு இன்னமும் ஓய்வூதியப் பலன்கள் எதுவும் வழங்கப்படாமல் இருப்பது, பஞ்சப்படி உள்ளிட்ட 19 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராடி வருகிறார்கள்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்தப் போராட்டங்களை ஆதரித்ததுடன் ஆட்சிக்கு வந்த உடனேயே இந்தப் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து தங்கள் வாக்குகளை அறுவடை செய்திருப்பதாகத் தமிழக மக்களைப் போலவே போக்குவரத்துக் கழகப் பணியாளர்களும் உணர்கிறார்கள் என்பதே வேதனையான உண்மை.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசுவதும், ஆளுங்கட்சியான பின் சென்ற அதிமுக அரசு எடுத்த அதே நிலைப்பாட்டை தொடர்வதும் என்பது திமுக அளித்த தேர்தல் அறிக்கைகளை மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்குகிறது. போக்குவரத்துக்கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது"
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
mnm say about tn govt transport staff issue