ஊராட்சி செயலாளர் பணிகளை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்புக.. தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!
OPS ask to fill panchayat secretary posts through TNPSC
தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி செயலாளர்களின் பணி விதிகளை அரசாணையாக வெளியிடவும் காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் உடனடியாக நிரப்பவும் திமுக அரசை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கிராம ஊராட்சிகளின் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நேரலை தயாரித்தல், கூட்டத்திற்கான அழைப்பதலை அளித்தல், ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் வருகை பதிவேட்டினை பராமரித்தல், முந்தைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தயாரித்தல், கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகளை பதிவு செய்தல் என பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொள்பவர்கள் ஊராட்சி மன்ற செயலாளர்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்று சொன்னால் கிராமத்தின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஊராட்சி செயலாளர்கள். இப்படிப்பட்ட இன்றியமையாத தன்மை வாய்ந்த ஊராட்சி செயலாளர்களை பணியில் அமர்த்தும், அதிகாரமும் பணியில் இருந்து நீக்கும் அதிகாரமும் ஊராட்சி மன்ற தலைவர்கள் வசம் இருந்த நிலையில் பணியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களால் பணி நீக்கம் செய்யப்படுவது என்பது வாடிக்கையாக இருந்தது.
இதனை எதிர்த்து நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதற்கு முடிவு கட்டும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சி காலத்தில் ஊராட்சி செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஊராட்சி மன்ற தலைவர்கள் தடையானைப் பெற்றதோடு இது தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில் ஊராட்சி செயலாளர்களை ஊராட்சி மன்றம் மூலம் நியமனம் செய்யக்கூடாது என்ற வகையில் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஊராட்சி அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஊராட்சி செயலாளர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நியமனம் செய்யப்படும் என ஆறாவது மாநில நிதி ஆணையமும் பரிந்துரை செய்துள்ளதாகவும், ஆனால் பணிகள் குறித்து அரசாணையை தமிழ்நாடு அரசு இன்னும் வெளியிடவில்லை என்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டால் ஏழை, எளிய திறமையான இளைஞர்கள் அரசு வேலைக்கு பெரும் வாய்ப்பு உருவாகும் என்றும், சமூகநீதி நிலை நாட்டப்படும் என்றும், இதன் மூலம் கட்சி வித்தியாசம் என்று ஊராட்சி செயலாளர்கள் செயல்படக்கூடிய நிலை உருவாகும் என்றும், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை பனகல் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கான ஊராட்சி செயலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி செயலாளர்கள் பணி விதிகள் தொடர்பான அரசாணை வெளியிட வேண்டும்; காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளில் நியாயம் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.
ஊராட்சி செயலாளர்கள் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அவர்களுடைய பணி விதிகள் குறித்து அரசாணையை உடனடியாக வெளியிடவும், காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
OPS ask to fill panchayat secretary posts through TNPSC