டீசல் விலை 6 ரூபாய் உயர்வு.. கொந்தளிப்பில் ஓபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


மொத்த கொள்முதல் டீசல் விலை உயர்வினால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினை ஈடுசெய்ய தி.முக. அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் குறைந்த கட்டணத்தில் வசதியாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்வதில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட இன்றியமையாப் பணியை மேற்கொள்ளும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கெனவே நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மொத்தக் கொள்முதல் டீசல் விலையினை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தியிருப்பதும், அதனை தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 91 ரூபாய் 43 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயத்தில் டீசலை மொத்தமாக கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களான இந்திய ரயில்வே, அனல் மின் நிலையங்கள், இரும்பு ஆலைகள், அரசுப் போக்குவரத்துக் - கழகங்கள் ஆகியவற்றிற்கான டீசல் விலை 97 ரூபாய் 49 காசு என்றும், சில்லறை விற்பனைக்கும் மொத்த கொள்முதலுக்கும் இடையேயான வித்தியாசம் கிட்டத்தட்ட 6 ரூபாய் என்றும், இந்த விலை உயர்வு காரணமாக, தமிழ்நாட்டிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன. 

மேற்படி விலை உயர்வினைப் பார்க்கும்போது 2013 ஆம் ஆண்டைய 'இரட்டை விலைக் கொள்கை' தான் என் நினைவிற்கு வருகிறது. 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய மத்திய அரசு ஒரு முடிவை எடுத்தது. அதன்படி, சில்லறை விற்பனைக்கான டீசல் விலையை லிட்டருக்கு 55 காசு உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள் மொத்த விற்பனைக்கான டீசல் விலையை லிட்டருக்கு 11 ரூபாய் அளவுக்கு உயர்த்தியது. இதனைக் கடுமையாக விமர்சித்த மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், மத்திய அரசின் இரட்டை விலைக் கொள்கை என்பது, ஏழையெளிய மக்களுக்கு போக்குவரத்துச் சேவையை அளிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலையை ஆபத்தான சூழ்நிலைக்கு எடுத்துச் செல்லும் என்றும், இதற்கேற்ப பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது என்பது இயலாத காரியம் என்றும், அவ்வாறு உயர்த்தினாலும் அதனைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி பொதுமக்களுக்கு இல்லை என்றும், பொதுவாக மொத்தமாக கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் அளிப்பதுதான் சாதாரணமான நடைமுறை என்றும் தெரிவித்து, இந்த விலை உயர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடத்தில் கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்தார்கள். இது தவிர, அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பினைத் தவிர்க்க டீசலை வெளிச்சந்தையில் நிரப்ப ஆணையிட்டார்கள். இதனையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் மொத்த கொள்முதல் விலையை படிப்படியாக குறைத்தன. இது, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின்மீது மாண்புமிகு அம்மா அவர்களுக்கு உள்ள , அக்கறையை வெளிப்படுத்துகிறது.

ஆட்சியில் இல்லாதபோது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தி.மு.க., தற்போது மொத்த கொள்முதல் டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தியும், இதனைக் கண்டித்து அறிக்கையும் விடவில்லை, விலையைக் குறைக்கவும் கோரிக்கை வைக்கவில்லை. ஒருவேளை வருவாய்க்காக இரட்டை விலைக் கொள்கையை தி.மு.க. வரவேற்கிறது போலும்! தி.மு.க.வின் இந்த 'இரட்டை நிலைப்பாடு' அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், ஏற்கெனவே ஓய்வூதியப் பலன்களுக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருக்கின்ற சூழ்நிலையில், இந்த விலை உயர்வு காத்திருப்புக் காலத்தை மேலும் அதிகரிக்கச் செய்யுமோ என்ற அச்சம் ஊழியர்களிடையே நிலவுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

எனவே, இரட்டை டீசல் விலைக் கொள்கை குறித்த தி.மு.க.வின் நிலைப்பாட்டினை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டுமென்றும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்டி, அவற்றில் பணிபுரியும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் அச்சத்தை போக்க வேண்டுமென்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops says about diesel price hike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->