தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதலுக்கு காரணம் என்ன? அன்புமணி இராமதாஸ் சொன்ன அதிர்ச்சி செய்தி!
PMK Anbumani Ramadoss Condemn to Punjab TN Kabadi Players attack incident
பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், வீராங்கனைகள், பயிற்சியாளரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "பஞ்சாப் மாநிலம் பதின்டா நகரில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின் போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகளும், அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டிருப்பதாகவும், பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
பிகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியுடன் இன்று நடைபெற்ற போட்டியின் போது, பிகார் வீராங்கனைகளின் விதிமீறல்கள் குறித்து புகார் செய்ததால், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது.
பஞ்சாப் மாநில அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தமிழக வீராங்கனைகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதேபோல், தமிழக பயிற்சியாளர் மீதான வழக்கை திரும்பப் பெறச் செய்வதுடன், பிகார் அணியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
விளையாட்டில் சமத்துவம் இருக்கவேண்டுமே தவிர சண்டைகள் இருக்கக்கூடாது. தமிழ்நாட்டு பல்கலை. அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வரும் நிலையில், திமுக அரசு உடனடியாக தலையிட்டு அவரை விடுவிக்க வழிவகை செய்யவேண்டும்.
மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to Punjab TN Kabadi Players attack incident