கணவன், குழந்தை கண் முன்னே இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது? - அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் சொந்த ஊருக்கு  திரும்புவதற்காக காத்திருந்த இளம் பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் குழந்தை கண் எதிரில், மூன்று பேர் கொண்ட கும்பலால் கத்தி முனையில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக  வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர்  கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும்,  பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே  திருப்பூரில்  இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்பதையே காட்டுகிறது.

தமிழ்நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகாத நாட்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும், தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு பெண்  மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இதைத்  தடுத்து நிறுத்த  வேண்டிய தமிழக அரசும், காவல்துறையும் இந்தக் கொடுமைகளை கைகட்டி  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது குறித்து குற்றச்சாட்டுகள் எழும் போதெல்லாம் குற்றவாளிகளை கைது செய்து விட்டதாகக் கூறி அரசும், காவல்துறையும்  மார்தட்டிக் கொள்கின்றன. பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதை உறுதி செய்ய வேண்டியது தான் அரசு மற்றும் காவல்துறையின் பணி  என்பதையும், குற்றம் செய்தவர்களை கைது செய்வது என்பது இழைக்கப்பட்ட கொடுமைக்கு தேடப்படும் பரிகாரம் தானே தவிர அதில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதையும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் எப்போது உணர்வார்கள்? என்பது தான் தெரியவில்லை.

திருப்பூரில் இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை  செய்தவர்கள் பிகாரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. வெளி மாநிலத்தவர் அதிகம் பணி செய்யும் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் நிலையில், வெளி மாநிலத்தவரை கண்காணிக்கவும்,  சுற்றுக்காவலை வலுப்படுத்தவும் காவல்துறையும், அரசும்  நடவடிக்கை  எடுத்திருந்தால்  இந்தக் கொடுமை நடந்திருக்காது.

தமிழக அரசு இனியும் இல்லாத சட்டம் - ஒழுங்கை இருப்பதாக வீண் பெருமை பேசாமல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும்  நடமாடுவதை உறுதி செய்யவும்  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Anbumani Ramadoss Condemn to TN Police DMK Govt Mk Stalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->