சாதிவாரி கணக்கெடுப்பு: அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Say All party meet for Caste Census Survey
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழ்நாட்டில் அனைவருக்கும் முழுமையான சமூகநீதி வழங்குவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசே மேற்கொள்ள வேண்டும் என்ற முழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கண்டும் காணாமலும் திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் சமூகநீதி சார்ந்த விவகாரத்தில் திமுக கடைபிடித்து வரும் இத்தகைய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் கும்மிடிப்பூண்டி தொடங்கி குமரிமுனை வரை அனைத்து நிலப்பகுதிகளிலும், அனைத்து சமூக மக்களாலும் வலியுறுத்தப்பட்டு வரும் ஒற்றைப் பெரும் கோரிக்கை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு அந்த மாநில மக்களின் உணர்வுகளையும், விருப்பங்களையும் அறிந்து கொண்டு அவற்றை செயல்படுத்த வேண்டும் என்ற கடமையும், பொறுப்பும் உண்டு.
ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் மட்டும் ஆளும் திமுக அதன் குறுகிய அரசியல் லாபங்களுக்காக மக்களின் உணர்வுகளை மதிக்க மறுக்கிறது.
சமூகநீதியைக் காக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை திமுக அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், அதை நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தான் உண்டு; தமிழக அரசுக்கு கிடையாது என்று கூறி பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயம் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லும் என்று 2010-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், அடுத்த ஓராண்டுக்குள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது. ஆனால், அதன்பின் 15 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக, பழைய புள்ளி விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக அரசு, அதன் அடிப்படையில் 69% இடஒதுக்கீடு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தது.
அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் எந்த நேரத்திலும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். அப்போது தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்தும் அளவுக்கு சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றால் அந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்படலாம்.
உச்சநீதிமன்றம் சாதிவாரி மக்கள்தொகை விவரங்களைக் கோரும் போது, மத்திய அரசு இன்னும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை என்று மத்திய அரசு மீது பழியைப் போட முடியாது. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழ்நாடு அரசு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதற்கான அதிகாரம் 2008-ஆம் ஆண்டின் இந்திய புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுக்கு வழங்கப்பட்டிருப்பதால், அதிகாரம் இல்லை என்று கூறி பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.
இந்தியாவில் பிகார், தெலுங்கானா, கர்நாடகம், ஒதிஷா ஆகிய 4 மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த உச்சநீதிமன்றமோ, உயர்நீதிமன்றங்களோ எந்தவித தடையும் விதிக்கவில்லை என்பதால், தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த எந்தத் தடையும் இல்லை. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த திமுக அரசு தயங்குவது ஏன்?
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது கடினமான பணியல்ல. தமிழக அரசு நினைத்தால் அதன் பணியாளர்களைக் கொண்டு, ரூ.300 கோடியில் அடுத்த இரு மாதங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும். இதை செய்ய தமிழக அரசை தடுப்பது எது? எனத்தெரியவில்லை.
தமிழ்நாட்டை பாதிக்கும் மிக முக்கியமான சிக்கலில் நாட்டு மக்களின் உணர்வுகளை முழுமையாக அறிந்து கொள்ளாமலும், மதிக்காமலும் திமுக அரசு செயல்பட முடியாது. தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை அவர்களின் பிரதிநிதிகளான அரசியல் கட்சிகளின் வாயிலாக அறிந்து கொண்டு செயல்படுத்த வேண்டியது திமுக அரசின் கடமை.
அதை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் மாநில அரசின் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்த வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Say All party meet for Caste Census Survey