மொத்தம் 17 தீர்மானங்கள் என்ன? சிறப்புப் பொதுக்குழுவில் பாமக அதிரடி.! - Seithipunal
Seithipunal


'2021-க்கு விடை கொடுப்போம்! 2022-ஐ வரவேற்போம்' என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

இந்த தீர்மானங்கள் என்னென்ன என்பது குறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 

தீர்மானம் 1: நீட் விலக்கு சட்டத்திற்கு குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஒப்புதல் பெற்று, 2022-23 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் 2: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.50% உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க பா.ம.க. உறுதியேற்கிறது!

தீர்மானம் 3: அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் 4: தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100 விழுக்காடும், தனியார் வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காடும் தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய சட்டம் இயற்றவேண்டும்.

தீர்மானம் 5: துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்!

தீர்மானம் 6: தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்கவேண்டும்

தீர்மானம் 7: மழைவெள்ள பாதிப்பு - தமிழக அரசு கோரிய ரூ.4,626 கோடி நிதியை மத்திய அரசு தாமதமின்றி வழங்கவேண்டும்

தீர்மானம் 8: சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்தை தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு மீண்டும் திணிக்கக்கூடாது!

தீர்மானம் 9: பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்!

தீர்மானம் 10: 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் மாதையன், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்!

தீர்மானம் 11: பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்தும் சட்டத்தை விரைவாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தீர்மானம் 12: சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 69 பேரை விடுவிக்கவும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை வேண்டும்.

தீர்மானம் 13: கேரள அரசின் முட்டுக்கட்டைகளை தகர்த்து, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்!

தீர்மானம் 14: காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்!

தீர்மானம் 15: தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்!

தீர்மானம் 16: தமிழ்நாட்டில் ஓமைக்ரான் கொரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்!

தீர்மானம் 17: 2022ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்துவதற்கான திண்ணைப் பிரச்சார ஆண்டாக கடைபிடிக்கப்படும்!

தமிழ்நாட்டில் மக்கள் நலனுக்காக பாடுபடுவதிலும், பொதுமக்களின் பிரச்னைகளுக்காக போராடி தீர்வு காண்பதிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணை வேறு எந்தக் கட்சியும் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை மற்றும் தொண்டர்களின் உழைப்புக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பது வருத்தத்துடன் ஏற்கவேண்டிய உண்மை.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததற்கான காரணம் மக்களுக்காக பா.ம.க. செய்த நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்பதும், பா.ம.க.வுக்கு எதிரான பிற கட்சிகளின் அவதூறு பரப்புரைகள் முறியடிக்கப்படவில்லை என்பதும் தான். மக்களுக்காக ஆயிரம் நன்மைகள் செய்தாலும்கூட, அதை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதன் மூலம் தான் மக்களின் ஆதரவையும், வாக்குகளையும் பெற முடியும். இதற்காக திண்ணைப் பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, மருத்துவர் அய்யா அவர்களின் அறிவுரைப்படி, 2022ஆம் ஆண்டை பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்துவதற்கான திண்ணைப் பிரச்சார ஆண்டாக கடைபிடிக்க இந்தப் பொதுக்குழு உறுதி ஏற்கிறது. 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் மிக அதிக அளவில் வெற்றிகளை குவிக்க கடுமையாக உழைக்கவும் பா.ம.க. பொதுக்குழு உறுதியேற்கிறது."

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK General Committee meet 17 Resolutions


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->