பாமக பொதுக்குழு கூட்டத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்.! ஓடிவந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!
PMK General Committee meet some incident
'2021-க்கு விடை கொடுப்போம்! 2022-ஐ வரவேற்போம்' என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாமகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது ஒரு பெண்மணிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது உடனடியாக ஓடிவந்த பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், மயங்கி விழுந்த பெண்மணிக்கு முதலுதவி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டார். பின்னர் இந்த பெண்மணிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
அதனை தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன தீர்மானங்கள் பின்வருமாறு
1: நீட் விலக்கு சட்டத்திற்கு குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஒப்புதல் பெற்று, 2022-23 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.50% உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க பா.ம.க. உறுதியேற்கிறது!
3: அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4: தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100 விழுக்காடும், தனியார் வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காடும் தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய சட்டம் இயற்றவேண்டும்.
5: துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்!
6: தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்கவேண்டும்
7: மழைவெள்ள பாதிப்பு - தமிழக அரசு கோரிய ரூ.4,626 கோடி நிதியை மத்திய அரசு தாமதமின்றி வழங்கவேண்டும்
8: சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்தை தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு மீண்டும் திணிக்கக்கூடாது!
9: பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்!
10: 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் மாதையன், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்!
11: பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்தும் சட்டத்தை விரைவாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
12: சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 69 பேரை விடுவிக்கவும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை வேண்டும்.
13: கேரள அரசின் முட்டுக்கட்டைகளை தகர்த்து, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
14: காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்!
15: தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்!
16: தமிழ்நாட்டில் ஓமைக்ரான் கொரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்!
17: 2022ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்துவதற்கான திண்ணைப் பிரச்சார ஆண்டாக கடைபிடிக்கப்படும்!
English Summary
PMK General Committee meet some incident