50000 பேருக்கு வேலை சாதனையா? நீங்கள் சொன்னது நினைவில் இருக்கா? ஸ்டாலினை திணறடிக்கும் அன்புமணி! - Seithipunal
Seithipunal


இரண்டரை ஆண்டுகளில் 22,781 பேருக்கு அரசுப் பணி சாதனையல்ல; ஆண்டுக்கு இரண்டரை லட்சம் அரசு வேலை வழங்குங்கள் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்த பிறகு கடந்த இரு  ஆண்டுகளில் 12,576 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும்,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 10,205 பேருக்கு நேற்று பணி ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும்,  அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள்  வழங்கப்படவிருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களில் கடந்த இரு ஆண்டுகளில் வழங்கப்பட்டதாக கூறப்படும் அரசு வேலைகளின் எண்ணிக்கையும்,  அடுத்த இரு ஆண்டுகளில் வழங்கப்படவிருப்பதாக கூறப்படும் தமிழக அரசு வேலைகளின்  எண்ணிக்கையும் போதுமானவை அல்ல.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 22,781 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது.  ஒப்பீட்டளவில் தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததை விட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை  குறைந்திருக்கிறது. இது சாதனை அல்ல.

தமிழ்நாட்டில் அனைத்து அரசுத் துறைகளிலும் சேர்த்து 4 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலியிடங்களால் அவற்றின் செயல்பாடுகள்  பாதிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.  நடப்பாண்டில்,  6553 இடைநிலை ஆசிரியர்கள், 3587 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 10,140 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தும் இதுவரை ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை கூட இன்னும் வெளியிடப்படாததால் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகக் கூட அவர்கள் நியமிக்கப்பட வாய்ப்பில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள்  உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில்  வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.  ஆனால், புதிதாக  ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் கூட இன்னும் நிரப்பப்படவில்லை.  எந்தத் துறையிலும் புதிய பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. அந்த வகையில் திமுக வாக்குறுதி அளித்த ஐந்தரை லட்சம் அரசு வேலை  குறித்த வாக்குறுதி அப்படியே தான்  உள்ளது. அதை நிறைவேற்றுவதை நோக்கி ஓரடி கூட எடுத்து வைக்கப்படவில்லை.

பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும், தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும் பத்தாண்டுகளைக் கடந்தும் இன்னும் பணி நிலைப்பு செய்யப்படவில்லை. அதை விட ஆபத்தான போக்காக அனைத்து அரசுத் துறைகளிலும்  தனியார் நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தொழிலாளர்கள் உரிமைக்கு எதிரானது என்பதைக் கடந்து அரசுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டையும், பொறுப்புடைமையையும் கடுமையாக பாதிக்கும்.

சென்னையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியவாறு,’’அரசாங்க வேலைக்கு இருக்கின்ற மவுசு, எந்தக் காலத்திலும் குறையாது. போட்டித் தேர்வுகளில்  தேர்வு பெற்று,  எப்படியாவது ஒரு அரசுப் பணியை வாங்கிவிட வேண்டும் என்பது, படித்த இளைஞர்களுடைய ஒரு பெரிய கனவு” என்பது மிகவும் உண்மை. தமிழ்நாட்டு இளைஞர்களின் இந்தக் கனவை நனவாக்கும் கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. அதற்கான நடவடிக்கைகளை அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையிலும், திமுக ஆட்சிக்கு வந்தால் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும்  நடப்பு நிதியாண்டில் குறைந்தது  ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் ஆண்டுக்கு தலா இரு லட்சம் வீதம் 4 லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என அன்புமணி தெரிவித்துள்ளார். .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Leader Anbumani slams DMK Govt for the announcement of employment


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->