பாமகவின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்கள்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, சங்கமித்ரா மாநாட்டு அரங்கத்தில் "2022-க்கு விடை கொடுப்போம்!  2023-ஐ வரவேற்போம்" என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு நடந்து கொண்டு இருக்கிறது,

இந்த பொதுக்குழுவில் ஏற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :

அரசியல் தீர்மானம் : 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி: 40 மக்களவைத் தொகுதிகளிலும் களப்பணிகளை விரைவுபடுத்துவோம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் தனிச்சிறப்பே அனைத்திலும் முந்தியிருப்பது தான். தேர்தல்களை எதிர்கொள்வதற்கும் இது பொருந்தும். கடந்த கால தேர்தல்களுக்கு முந்தைய பாட்டாளி மக்கள்  கட்சியின் களப்பணிகளும், ஆயத்த நடவடிக்கைகளும் இதற்கு சாட்சி. இதை தமிழக அரசியல் களம் அறியும். அவற்றைப் போலவே 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பா.ம.க. தயாராகிவிட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை 2024-ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்திலேயே தொடங்கி விட்டன. அந்தக் கூட்டத்தில் கட்சியின் அமைப்பில் பல மாற்றங்களை செய்யத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு 110 புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கட்சியின் அடிப்படைக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டன.

2022-ஆம் ஆண்டு மே மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்போது முதல் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களையும், பாட்டாளி மக்கள் கட்சியினரையும் சந்தித்து வருகிறார். மக்களின் பிரச்சினைகளுக்காக, தமிழகத்தின் எந்தக் கட்சியையும் விட பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பா.ம.க.வால் தமிழகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கள் திறக்கப்பட்டு, மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலில் கடந்த 7 மாதங்களில் 125-க்கும் கூடுதலான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்தக்கட்டமாக, 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களையும், கிளை நிர்வாகிகளையும் நியமிக்கும் பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி தீவிரப்படுத்தியிருக்கிறது. இதற்காக ஒரு மக்களவைத் தொகுதியின் அனைத்து வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட பகுதிகளிலும், மேலிடப் பார்வையாளர்களின் மேற்பார்வையில் ஒரே நேரத்தில், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த இரு வாரங்களில் மட்டும் 3 மக்களவைத் தொகுதிகளில் இந்தப் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொய்கைநல்லூர்  கிளைக்கும், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வில்லிவலம் கிளைக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் நேரில் சென்று வாக்குச்சாவடி முகவர்களையும், கிளை நிர்வாகிகளையும் நியமித்து களப்பணியாற்றியிருக்கிறார். பல இடங்களில் இப்பணிகளை ஆய்வு செய்திருக்கிறார். இதனால், பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலைகளிலும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியும், உற்சாகமும் ஏற்பட்டிருக்கிறது.

அடுத்த இரு மாதங்களில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவை என மொத்தமுள்ள  40 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கும் பணிகளை நிறைவு செய்ய பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடி முகவர்களுக்கும்,  கிளை அளவிலான நிர்வாகிகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இந்த ஆக்கப்பூர்வமான பணிகள் பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.

மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலில், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டம், போதைப்பொருட்கள் விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் மக்கள் மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. மக்கள் நலனுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து எழுந்த எதிர்ப்புக்குரல்கள் அரசின் முடிவுகளை மாற்றியிருக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சி தான் அன்றும், இன்றும் மக்களுக்காகப் போராடும் கட்சி என்பதை இந்த வெற்றிகள் உறுதி செய்திருக்கின்றன என்பது பெருமையளிக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியால் விளைந்த பயன்களை அடித்தட்டு மக்கள்வரை கொண்டு சென்று சேர்க்க வேண்டியது பாட்டாளிகள் அனைவருக்குமான கடமை ஆகும். அதற்காக திண்ணைப் பிரச்சாரம் உள்ளிட்ட களப் பணிகளும், சமூக ஊடகங்களின் மூலமான பரப்புரையும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் இடங்கள் அனைத்திலும்  வெற்றி பெறுவது தான் நமது இலக்கு ஆகும். அந்த இலக்கை அடைவதற்காக கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும்  நமக்கிடும் அனைத்து கட்டளைகளையும் நிறைவேற்றுவோம்; களப்பணிகளை முழுவீச்சில் மேற்கொள்வோம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு உறுதியேற்றுக் கொள்கிறது.

 

தீர்மானங்கள்
தீர்மானம் 1: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து மத்தியிலும், மாநிலத்திலும் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க நிர்ணயிக்கப்பட்டிருந்த  50% உச்சவரம்பு நீக்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை பா.ம.க. கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் அது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட  வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோரை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படாதது பாரபட்சம் ஆகும். அதனால் தான் அதை பா.ம.க. எதிர்க்கிறது.

அதேநேரத்தில், இட ஒதுக்கீட்டிற்கான 50% உச்சவரம்பை அகற்றியது  செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், 50% உச்சவரம்பை காரணம் காட்டி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மறுக்கப்பட்டு வரும் முழுமையான சமூகநீதியை வழங்குவதற்கான வாய்ப்பை உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது. எந்த 50% உச்சவரம்பை காரணம் காட்டி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதோ, அந்த வரம்பு இப்போது நீக்கப்பட்டுவிட்ட நிலையில், அதைப் பயன்படுத்தி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட சமூக அநீதி போக்கப்பட வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி மிகவும் உறுதியாக உள்ளது.

இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதம் ஆகும். அதன்படி தான் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களான பட்டியலின மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1962-ஆம் ஆண்டுக்கு முன்பாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தால், அதன் அளவு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையானதாகவே இருந்திருக்கும்.

இந்தியாவில் இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டை தாண்டக்கூடாது என்று பாலாஜி வழக்கில் கடந்த 1962-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தான் தீர்ப்பளித்தது. அதனால் தான் 1979-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஓபிசி மக்கள்தொகை 52 விழுக்காட்டுக்கும் அதிகம் என்று மண்டல் ஆணையம் மதிப்பிட்டிருந்த போதிலும், அதற்கு முன்பே 50% உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்ததால்  ஓபிசி மக்கள்தொகையில் முழுமைப்படுத்தப்பட்ட பாதியளவான 27% என நிர்ணயிக்கப்பட்டது. இல்லாவிட்டால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 52% இட ஒதுக்கீடு  இப்போது நடைமுறையில் இருந்திருக்கும்.

1962-ஆம் ஆண்டில் பாலாஜி வழக்கில் நிர்ணயிக்கப்பட்டு, 1992-ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட 50% உச்சவரம்பு, இப்போது மத்திய அரசால் நீக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்துவதற்கு  எந்தத் தடையும் இல்லை. எனவே, தேசிய அளவிலும், மாநில அளவிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக உயர்த்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். அதற்கு வசதியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பா.ம.க சிறப்பு பொதுக்குழு வலியுறுத்துகிறது.

----------------------------------------------------------
தீர்மானம் 2: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக  தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்!

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை; தமிழக அரசு விரும்பினால் உரிய புள்ளிவிவரங்களுடன் அதற்கான சட்ட முன்வரைவை கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் பலமுறை கேட்டுக் கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழுவுடன் தமிழக முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை வழங்கும்படி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக தொடர்ந்து தமிழக அரசுக்கு நினைவூட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவர் அய்யா அவர்களின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று சட்டப்பேரவையிலும், சட்டப் பேரவைக்கு வெளியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்திருக்கிறார். அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதை பாட்டாளி மக்கள் கட்சி அறியும். அதற்காக  தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

அதேநேரத்தில், வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகி விட்டதாலும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு புதிய சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 9 மாதங்களாகி விட்டதாலும் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் எப்போது நிறைவேற்றப்படும்? என்ற எதிர்பார்ப்பு அச்சமுதாய மக்களிடம் எழுந்திருக்கிறது. அடுத்த சில மாதங்களில் 2023-24ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப் படவுள்ள நிலையில், இட ஒதுக்கீடு விரைவில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மருத்துவர் அய்யா அவர்களின் கோரிக்கையை ஏற்றும், வன்னியர் சமுதாய மக்களின் உணர்வுகளை மதித்தும் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக வன்னியர்களுக்கு  10.50% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இப்பொதுக்குழு கோருகிறது.

தீர்மானம் 3: தமிழ்நாட்டு மக்களின் வாழ்வை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் நற்பயனாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டம் 2022 அக்டோபர் 1&ஆம் நாள் பிறப்பிக்கப் பட்டது. அதே மாதத்தின் 18&ஆம் நாளில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், சட்டமியற்றப்  பட்டு இன்றுடன் 74 நாட்களாகின்றன. ஆனால், இன்னும் சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காததால் தமிழகத்தில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது. சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்ட நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகிவிட்டது. அதனால், இப்போது தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க சட்டமும் இல்லை; அவசர சட்டமும் இல்லை. அதனால், கடந்த நவம்பர் 27&ஆம் நாள் அவசர சட்டம் காலாவதியான பிறகு 16 நாட்களில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை 39 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மொத்த தற்கொலைகளின் எண்ணிக்கை 100&ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத்தால் இழந்த உயிர்களும், நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்களும் ஏராளம். இனி ஓர் உயிர் கூட ஆன்லைன் சூதாட்டத்திற்கு இரையாகக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்; தவறினால் அரசே 162&ஆவது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து ஆணையிட வேண்டும்.

 

தீர்மானம் 4: நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக 25,000 ஏக்கர் விளைநிலங்களை பறிப்பதை தமிழக அரசும், என்.எல்.சி. நிறுவனமும் உடனடியாக கைவிட வேண்டும்!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி புதிய சுரங்கம் மற்றும் ஏற்கனவே உள்ள சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை என்.எல்.சி நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் தீவிரப்படுத்தியிருக்கின்றன.  என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்திற்கோ, தமிழகத்திற்கோ எந்த பயனும் இல்லை; மாறாக இழப்புகள் தான் அதிகம்.

என்.எல்.சிக்கு இதுவரை 37,256 ஏக்கர் நிலங்களைக் கொடுத்த 25 ஆயிரம் குடும்பங்களிலிருந்து ஒருவர் கூட இப்போது என்.எல்.சியில் வேலையில் இல்லை. நிலத்தடி நீரை என்.எல்.சி நிறுவனம் உறிஞ்சுவதால் கடலூர் மாவட்டம் பாலைவனமாக மாறி வருகிறது. இத்தகைய சூழலில் முப்போகம் விளையும் 25,000 ஏக்கர் நிலங்களை என்.எல்.சிக்கு தாரை வார்ப்பதால், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் சுமார் 17,000 குடும்பங்களில் ஒருவருக்குக் கூட வேலை கிடைக்காது. ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டித் தரும் நிலங்களை உழவர்கள் இழப்பது மட்டும் தான் நடக்கும்.

என்.எல்.சி நிறுவனம் 25,000 ஏக்கர் நிலங்களையும் அடிமாட்டு விலைக்கு வாங்கி, தனியாருக்குத்  தான் தாரை வார்க்கப் போகிறது. வளமான நிலங்கள் தனியாருக்கு போவதை விட விவசாயிகளிடமே  இருந்தால், அவர்களின் தலைமுறைகளாவது தழைக்கும். எனவே, என்.எல்.சி விரிவாக்கத்திற்காக  25,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசும், என்.எல்.சி.யும் கைவிட வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டை விட்டு என்.எல்.சி வெளியேற வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது.

 


தீர்மானம் 5: தமிழ்நாட்டில் தனியார் வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய உடனடியாக சட்டம் இயற்றவேண்டும்.

தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளாக இருந்தாலும், தனியார் பெரு நிறுவனங்களின் வேலைகளாக இருந்தாலும் அவை தமிழர்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகின்றன. என்.எல்.சி. நிறுவனத்தில் அதிகாரிகள் நிலை வேலைவாய்ப்புகளில் 100 விழுக்காடும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கே  தாரை வார்க்கப்படுகின்றன. வங்கிப் பணிகள், தொடர்வண்டிப் பணிகள் உள்ளிட்ட பெரும்பான்மையான  மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் 80% பணிகளில் வட இந்தியர்கள் தான் நியமிக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படும் தனியார் நிறுவனங்களிலும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஓசூரில் அமைக்கப்பட்டு வரும் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உடனடியாக 18,000 பேருக்கும், அடுத்த சில ஆண்டுகளில் மொத்தம் 43,000 பேருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. ஆனால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டும் கூட 2348 தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை வழங்கப்பட்டுள்ளது; 6106 பேருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் வட இந்தியர்களும், பிற மாநிலத்தவரும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் பல்லாயிரம் கோடி  ரூபாய் மதிப்பிலான சலுகைகளை பெற்றுக் கொண்டு அமைக்கப்படும் தனியார் நிறுவனங்களில் இந்த அளவில் தான் தமிழர்களுக்கு வேலைகள் வழங்கப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் தமிழர்கள் அகதிகளாக மாறி விடும் ஆபத்து உள்ளது. அத்தகைய நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

அதற்காக தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் இடைநிலை மற்றும் கடைநிலை பணிகளில் 100 விழுக்காடும், அதிகாரிகள் பணிகளில் 50 விழுக்காடும் மாநில ஒதுக்கீடாக வழங்கப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களின் பணிகளில் 80 விழுக்காட்டை தமிழர்களுக்கு வழங்குவதற்கான சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இக்கூட்டம் கோருகிறது.

 

தீர்மானம் 6: அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்!

தமிழ்நாட்டில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 12 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். ஆனால், அவற்றில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 4 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இவற்றால்  இருவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலில் மிக அதிக எண்ணிக்கையிலான காலியிடங்களால்  அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. மற்றொருபுறம் அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற இளைஞர்களின் கனவு கானல் நீராக மாறி வருகின்றன. இரண்டுமே பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நவம்பர் 30&ஆம் தேதி நிலவரப்படி 67.61 பேர் அரசு வேலை கோரி பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலை வழங்க வேண்டியது அரசின் கடமை ஆகும். இருக்கும் காலியிடங்களை நிரப்பினாலே 4 லட்சம் பேருக்கு வேலை வழங்க முடியும் எனும் நிலையில் அந்த வாய்ப்பை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலியிடங்கள் அனைத்தையும் ஒரே கட்டமாக நிரப்ப முடியவில்லை என்றால், ஆண்டுக்கு 1 லட்சம் பணியிடங்கள் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு பொதுக்குழு  கேட்டுக்கொள்கிறது.


தீர்மானம் 7: சோழர் பாசனத் திட்டம், தருமபுரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்- ரூ. 1 லட்சம் கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்!

ஒரு மாநிலத்தின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டுமானால், விவசாயம் செழிக்க வேண்டும்; விவசாயம் செழிக்க வேண்டுமானால் நீர்வளம் பெருக வேண்டும். ஆனால், காமராசர் காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த பாசனத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

தமிழ்நாட்டில் பாசனக் கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெற்ற நிலங்களின்  எண்ணிக்கை 1960&ஆம் ஆண்டில் 9.03 லட்சம் ஹெக்டேரில் இருந்து 2017-ஆம் ஆண்டில் 6.22 லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது. அதேபோல், ஏரி, குளங்கள் மூலமான பாசனப் பரப்பு இதே காலத்தில் 9.41 லட்சம் ஹெக்டேரில்  இருந்து 3.69 லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது. அதாவது 57 ஆண்டுகளில் ஏரி, குளங்கள் மற்றும் பாசனக் கால்வாய்கள் மூலமான சாகுபடி பரப்பு பாதிக்கும் கீழாக குறைந்து விட்டது. இது விவசாயத்திற்கு நல்லதல்ல. அரியலூர் மாவட்டத்திற்கு சோழர் கால பாசனத் திட்டம்,  தருமபுரி மாவட்டத்திற்கு காவிரி உபரிநீர் திட்டம் என செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பல உள்ளன.

இந்தியாவின் மற்ற மாநிலங்கள் ஏராளமான பாசனத் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தமிழகம் மட்டும் பின்தங்கியிருக்கக் கூடாது. தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பாசனத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். இதற்காக ஆண்டுக்கு தலா ரூ.25 ஆயிரம் கோடி வீதம் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது.

 


தீர்மானம் 8: மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவது குறித்து காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. ஆனால், அதை சற்றும் மதிக்காமல் மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு மத்திய அரசும் இடம் கொடுப்பது உச்சநீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணையும் கட்டக்கூடாது என்பது தான் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு ஆகும். மத்திய நீர்வள அமைச்சராக உமாபாரதி இருந்த போது, இது தான் மத்திய அரசின் நிலைப்பாடு என்று அறிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதுதான் மத்திய அரசின் நிலைப்பாடாக நீடிக்க வேண்டும். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கூடாது.
அதன்படி, மேகதாது அணை தொடர்பான கர்நாடக அரசின் அனைத்து மனுக்களையும் மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்த திட்டத்தையும்  செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்பதை மத்திய அரசு அதன் நிலைப்பாடாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம் 9: வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட  2 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் இரண்டாவது வாரத்தில் பெய்த தொடர்மழையால் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி பாசன பகுதிகளில் மட்டும் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி பயிர்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழக அரசும் பாதிப்புகள் கணக்கிடப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்தது.

ஆனால், மழை பெய்து 50 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இதுவரை இழப்பீடு வழங்கப்பட வில்லை. கடன் வாங்கி சாகுபடி செய்த உழவர்கள், தமிழக அரசிடமிருந்து இழப்பீடு கிடைக்காவிட்டால்  மீள முடியாத கடன் சுமையில் சிக்கி விடுவார்கள். எனவே, உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு  அரசு உடனடியாக இழப்பீடு வழங்க பா.ம.க. வலியுறுத்துகிறது.

தீர்மானம் 10: கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்து போதையில்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா, அபின் உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டம் பத்தாண்டுகளாக அதிகரித்து வருகிறது. அதனால், வரலாறு காணாத வகையில் இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி சிறுவர்கள் கூட போதைக்கு அடிமையாகும் அவலம் தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும் எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

இளைஞர்களும், மாணவர்களும் தான் நாட்டின் எதிர்காலம். ஆனால், தமிழகத்தின் பெரும்பான்மையான கல்வி நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகள் தான் போதைப்பொருட்கள் விற்பனையாகும் மையங்களாக மாறி வருகின்றன. இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா, அபின் உள்ளிட்ட அனைத்து போதைப்பொருட்களையும் ஒழித்து தமிழகத்தை போதையில்லா மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; இளைய தலைமுறையை காக்க வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு கோருகிறது.

 

 தீர்மானம் 11: தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்!

நாட்டையும், சமுதாயத்தையும், வீட்டையும் சீரழிப்பதில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருட்களை விட மிக மோசமானது மது ஆகும். போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன என்றால், மது அரசின் ஆதரவுடன் சட்டப்பூர்வமாக மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் 10 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் மது அருந்துகின்றனர்; வகுப்பறைகளில் மாணவிகள் மது அருந்தி மயங்கி விழுகின்றனர்; அரசுப் பேருந்துகளில் பள்ளிக்கு செல்லும் போது மாணவர்களும், மாணவிகளும் மது அருந்துகின்றனர் என்பதெல்லாம் தமிழ்நாட்டின் அன்றாய நிகழ்வுகளாகி விட்டன. இவை எதுவுமே தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பவை அல்ல; இவை அவப்பெயர் சேர்க்கக்கூடியவை.

அதுமட்டுமின்றி மதுப்பழக்கம் இளைஞர்களின் பணித்திறனை கடுமையாக பாதிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சியை குறைக்கிறது. இந்தக் கேடுகளைத் தடுத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், இளைஞர்களின்  எதிர்காலத்தையும் காக்கும் வகையில் தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஒரே கட்டமாகவோ அல்லது படிப்படியாகவோ தமிழக அரசை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு கோருகிறது.

தீர்மானம் 12: அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய ஓய்வூதியத் திட்டத்தை  தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தான். கடந்த 20 ஆண்டுகளாக  எழுப்பப்பட்டு வரும் கோரிக்கையை தேர்தல் நேரத்தில் மட்டும் ஆதரிக்கும் அரசுகள், அதன் பின்னர் மறந்து விடுகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை என்று கூறியே இதுவரை ஆட்சி செய்த அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தவிர்த்து வருகின்றன.

ஆனால், அண்மைக்காலங்களில் இராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமல்ல என்ற மாயை தகர்க்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் கடந்து 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி 60 வயதில் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய  ஓய்வூதியம் மிகவும் அவசியம் ஆகும். எனவே, தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு வலியுறுத்துகிறது.
------------------------------------

தீர்மானம் 13: அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்!

தமிழ்நாடு அரசின் இரத்த நாளங்களாக திகழ்பவர்கள் அரசு ஊழியர்கள் தான். ஆனால், அவர்களின்  நியாயமான கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படாமல் கிடக்கின்றன. அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமைகளில் முதன்மையானது அகவிலைப்படி உயர்வு ஆகும். 2022-ஆம் ஆண்டில் 6 மாதங்களுக்கு ஒரு முறை வீதம் இரு முறை வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு ஒருமுறை  மட்டும் தான் வழங்கியிருக்கிறது. புத்தாண்டு முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வையும் கருத்தில் கொண்டால் தமிழக அரசு ஊழியர்களுக்கு இரு அகவிலைப்படி உயர்வு நிலுவையில் உள்ளது.

ஈட்டிய விடுப்பை பணமாக்கிக் கொள்ள அனுமதித்தல், ஊதிய முரண்பாடுகளை களைதல், வணிகவரி  மற்றும் பத்திரப் பதிவுத் துறை பணியாளர்களுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குதல், அரசு பணியிடங்களை நிரப்பாமல் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிப்பதை கைவிடுதல் உள்ளிட்ட எந்தக் கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. அரசு நிர்வாக இயந்திரத்தை இயக்கும் அரசு ஊழியர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
-------------------------------------------

தீர்மானம் 14: தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஓர் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; ஒரு லட்சம் ஆசிரியர்களை புதிதாக நியமிக்க வேண்டும்!

தரமான கல்வி வழங்குவதற்கான அடிப்படைத் தேவை ஆசிரியர்களும், முழுமையாக கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளும் தான். ஆனால், இந்தியா விடுதலையடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட போதிலும் இந்த விஷயத்தில் தமிழ்நாடு இன்னும் தன்னிறைவு பெற முடியவில்லை.

தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப்பள்ளிகள்,   6,587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் 1,66,851-க்கும் மேற்பட்ட வகுப்புகள் உள்ளன. வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்பது குறைந்தபட்சத் தேவை என்பதால், தொடக்கக் கல்விக்கு மட்டும் 1,66,851 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், 69,640  ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அதாவது குறைந்தபட்ச தேவையை விட 97,211 ஆசிரியர்கள் குறைவாகவே உள்ளனர். ஓராண்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கணக்கில் கொண்டால் ஆசிரியர் பற்றாக்குறை லட்சத்தை தாண்டும்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 3,800 பள்ளிகளில் ஓராசிரியர் மட்டும் தான் உள்ளனர். உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. ஆசிரியர்களே  இல்லாமல் கல்வியின் தரத்தை வளர்க்கப்போவதாக அரசு கூறுவதெல்லாம் பகல் கனவாகவே இருக்கும்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களும், கட்டமைப்புகளும் இல்லாததால் தான் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயங்குகின்றனர். அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்களை படையெடுக்கச் செய்ய வேண்டும் என்றால், பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.  ஒவ்வொரு வகுப்புக்கும் ஓர் ஆசிரியர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக, அடுத்த இரு ஆண்டுகளில் ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு கோருகிறது.

தீர்மானம் 15: நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்!

2023-24ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு இன்னும் விலக்கு  பெறப்பட வில்லை என்பதால், தமிழக மாணவர்கள் வரும் ஆண்டிற்கும் நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாகியுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நிரப்பவும், நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரியும் தமிழக சட்டப்பேரவையில் முதலில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதியும், பின்னர் மார்ச் 8-ஆம் தேதியும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. நீண்ட தாமதத்திற்கு பிறகு மே 2-ஆம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட அந்த மசோதா குறித்து  கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு 7 வினாக்களை எழுப்பியது. அதற்கு கடந்த ஜூலை மாதத்தில் தமிழக அரசு பதில் அனுப்பி விட்டது. அதன் பின் 5 மாதங்கள் ஆகியும் அதன் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது நியாயமல்ல. 2023 நீட் தேர்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

------------------------------------------
தீர்மானம் 16: சிங்களப் படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், கைது செய்யப் படுவதற்கும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்!

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 1000 மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தமிழக மீனவர்களிடமிருந்து 125-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை மீட்க முடியவில்லை.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகியது. தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளும் நுழைவது என்பது அவர்களையும் அறியாமல் இயல்பாக நடக்கக்கூடியது ஆகும். இந்த சிக்கலுக்குத் தீர்வு இந்திய- இலங்கை கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடிக்க அனுமதிப்பது தான். இதில் சிக்கல் ஏற்படாமல் தடுக்க கால அட்டவணை வகுத்துக் கொள்ளலாம். எனவே, இது தொடர்பாக இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில், இரு தரப்பு மீனவர்களும் பேச்சு நடத்தி, நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோருகிறது.
-------------------------------------
தீர்மானம் 17: சென்னையில் எஞ்சியுள்ள மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; சேதமடைந்த சாலைகள் அனைத்தையும் ஒரு மாதத்திற்குள் சீரமைக்க வேண்டும்!

சென்னையில் வெள்ளநீர் தேங்குவதைத் தடுக்க கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் இன்னும் முழுமையான நிறைவடையவில்லை. வடகிழக்கு பருவமழையால்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட அப்பணிகளை உரிய பாதுகாப்புடன் மீண்டும் தொடங்க வேண்டும். மின்னல் வேகத்தில் பணிகளை மேற்கொண்டு அடுத்த சில வாரங்களில் நிறைவு செய்ய வேண்டும்.

மழைநீர் வடிகால் பணிகள், மெட்ரோ தொடர்வண்டி பணிகள் ஆகியவற்றுக்காக சென்னை மாநகரின்  பெரும்பான்மையான சாலைகள் சேதமடைந்துள்ளன. அண்மையில் பெய்த தொடர்மழையில் அனைத்து சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகர சாலைகள் பயணிக்கத் தகுதியான நிலையில் இல்லாததால் அனைத்து சாலைகளையும் அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக மீண்டும் அமைக்க வேண்டும்  என்று தமிழக அரசையும், சென்னை மாநகராட்சியையும் இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
--------------------------------------
தீர்மானம் 18: புதுவையில் பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 18% இட ஒதுக்கீடு வழங்கப்படாவிட்டால் பா.ம.க. சார்பில் மாபெரும் போராட்டம்!

புதுச்சேரியில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 18 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. கல்வியில் அனைத்து நிலைகளிலும் இட ஒதுக்கீடு வழங்கப் படும் நிலையில், வேலைவாய்ப்பில் சி  மற்றும் டி பிரிவு பணிகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. ஊதியக் குழு பரிந்துரைகளின்படி பல்வேறு பணிகளுக்கு அடிப்படை ஊதியம் உயர்த்தப்படும் போது, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஊதியம் உள்ள பணிகள் சி பிரிவிலிருந்து பி பிரிவுக்கு மாற்றப் படுகின்றன. அவ்வாறு மாற்றப்பட்ட பணிகளுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இதனால் வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள 11 சமுதாயங்கள் பாதிக்கப்படுகின்றனர். இது சமூக அநீதி. இதற்கு 2012-ஆம் ஆண்டில் புதுவை அரசு பிறப்பித்த அரசாணை தான் காரணமாகும்.

அண்மையில் காவல் ஆய்வாளர் பணிக்கு எம்.பி.சி இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. அதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து பி பிரிவு பணிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என புதுவை அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை எம்.பி.சி. இட ஒதுக்கீடு வழங்கப் படவில்லை. அதுமட்டுமின்றி தீயவிப்புத் துறை புள்ளியியல் துறை உள்ளிட்ட பல துறைகளில் பி பிரிவு பணிகளுக்கான ஆள் தேர்வு அறிவிக்கை எம்.பி.சி இட ஒதுக்கீடின்றி வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இது எம்.பி.சி மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம். இதை பா.ம.க. அனுமதிக்காது.

புதுவை அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, பி பிரிவு பணிகள் அனைத்திற்கும் எம்.பி.சி  இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். புதுவை அரசு உடனடியாக இதை செய்யத் தவறினால் புதுவை மாநில மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக நடத்தும் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.
--------------------------------------------------
தீர்மானம் 19: புதுவையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டின் அண்டைப் பகுதியான புதுவை யூனியன் பிரதேச அரசுக்கு தேவையான அதிகாரங்கள் இல்லாததால் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் எதையும் செய்ய முடிவதில்லை. எந்த திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தாலும் அதற்கு மாநில ஆளுனரின் வழியாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது. அதனால், வளர்ச்சித் திட்டங்களாக இருந்தாலும், மக்கள் நலப் பணிகளாக இருந்தாலும் அவற்றை செயல்படுத்த முடியாத நிலையில் தான் புதுவை அரசு தடுமாறி வருகிறது.

மக்களுக்குத் தேவையான திட்டங்களை செய்ய முடியவில்லை என்றும், எதை செய்தாலும் அதற்கு அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்றும் புதுவை மாநில முதலமைச்சரே புலம்பும் நிலை தான் காணப்படுகிறது. இது ஜனநாயகம் அல்ல. இந்த நிலையை மாற்றி புதுவையை நீடித்த வளர்ச்சிப் பாதையில் பயணிக்கச் செய்வதற்காக புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம் 20: 2023ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியில் கட்சி சாராத இளைஞர்களை சேர்ப்பதற்கான சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்!

தமிழ்நாட்டில் அதிக இளைஞர்களைக் கொண்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பதில்  யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேபோல் மக்கள் நலனுக்காக பாடுபடுவதிலும், பொதுமக்களின் பிரச்னைகளுக்காக போராடி தீர்வு காண்பதிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணை வேறு எந்தக் கட்சியும் இல்லை.  ஆனாலும், பாட்டாளி மக்கள் கட்சி எந்த இலக்கை அடைய வேண்டுமோ, அந்த இலக்கை அடைய இன்னும் கூடுதலான உழைப்பும், இளைஞர் சக்தியும் தேவைப்படுகிறது.

எந்தக் கட்சியையும் சேராத லட்சக்கணக்கான இளைஞர்களும், சமூக செயல்பாட்டாளர்களும், பொது மக்களும் தங்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக் கொள்ள தயாராக இருக்கின்றனர். அவர்களை சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளை விளக்கி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பாண்டாக 2023&ஐ இப்பொதுக்குழு அறிவிக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து பிரிவு மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், குறிப்பாக இளைஞரணி மற்றும் மாணவரணியை சேர்ந்தவர்கள் இந்தப் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வெற்றி பெற பா.ம.க.வின் புத்தாண்டு பொதுக்குழு உறுதியேற்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK New Year 2023 general meet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->