நாராயணசாமி நாயுடுவின் சிலை விவகாரம்: தமிழக அரசுக்கு டாக்டர் இராமதாஸ் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "உழவர்களின் ஒப்பற்ற தலைவராக திகழ்ந்த சி.நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், அவருக்கு எனது வணக்கங்களையும், மரியாதையும் செலுத்துகிறேன்.

உழவர்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் அவர் நடத்திய போராட்டங்களையும், தியாகங்களையும் இந்த நாளின் உழவர்கள் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.

நாராயணசாமி நாயுடுவின் பெருமைகள் நினைவு கூறப்பட வேண்டிய இந்த காலக்கட்டத்தில் பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் அவரது திருவுருவச் சிலையை இடமாற்றம் செய்ய பெரம்பலூர் நகராட்சி முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. நகராட்சியின் இந்த முடிவு உழவர் பெருந்தலைவருக்கு இழைக்கப்படும் பெரும் அவமதிப்பு ஆகும்.

உழவர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தரவும், அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாராயணசாமி நாயுடு ஆற்றிய பணிகள் அனைவரும் அறிய வேண்டிய வரலாறு ஆகும். 1970-களில் தந்தை, மனைவி ஆகியோரை அடுத்தடுத்து இழந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் வாடிய போதும், அதை பொருட்படுத்தாமல் விவசாயத்துக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தினார்.

உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும், பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண் பொருட்களுக்கு அடிப்படை விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும், வேளாண்மையைத் தொழிலாக அங்கீகரிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நாராயணசாமி நாயுடு போராடியதன் பயனாகவே தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவின் பல மாநிலங்களில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கிடைத்தது.

ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உழவர் சங்கங்கள் ஏற்படுத்தப்படுவதற்கும் நாராயணசாமி நாயுடு தான் காரணமாக இருந்தார்.

நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர் அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே 2019-ஆம் ஆண்டு இதே நாளில் அவருக்கு கோயம்புத்தூர் மாவட்டம், வையம்பாளையத்தில் தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. 

நாராயணசாமி நாயுடு புகழை மேலும், மேலும் பரப்ப வேண்டிய காலத்தில் அவரது சிலையை அகற்றி வேறிடத்தில் வைக்க முயல்வது நியாயமல்ல. இந்த முயற்சியை பெரம்பலூர் நகராட்சியும், தமிழக அரசும் கைவிட வேண்டும்” என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Ramadoss Condemn to DMK Govt MK Stalin Narayanasamy Statue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->