பிரதமரின் இலங்கை பயணம்: டாக்டர் இராமதாஸ் விடுத்த அவசர கோரிக்கை! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி, ஏப்.5-ம் தேதி கொழும்பு செல்லவிருப்பதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதற்கு முன்பாக இலங்கை அரசுடன், இந்தியா பேச்சு நடத்தி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்த அவரின் அறிக்கையில் “ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் பகுதியிலிருந்து சென்று வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வாழ்வாதாரம் தேடி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் நடத்தி வரும் இத்தகைய மறைமுகத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

2025-ம் ஆண்டு பிறந்து இன்றுடன் 66 நாட்கள் மட்டுமே ஆகின்றன. இந்த காலத்தில் மொத்தம் 133 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. மீனவர்களின் 18 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். 

அதிக அபராதம் விதிக்கப்பட்டு, அதை செலுத்த முடியாமல் இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தியுள்ள நிலையில் நடைபெற்றுள்ள இந்த கைது நடவடிக்கை மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சிங்களக் கடற்பரையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமின்றி அதிக எண்ணிக்கையிலான மீனவர்கள் அபராதம் விதிக்கப்பட்டும், சிறை தண்டனை விதிக்கப்பட்டும் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். 

அபராதம் விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரால் அதை செலுத்த முடியாத நிலையில், அவர்கள் எப்போது விடுதலை ஆவார்கள் என்பது தெரியவில்லை. இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டிய மத்திய, மாநில அரசுகள் போதிய கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருப்பதை ஏற்க முடியாது.

இலங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு செல்லவிருப்பதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதற்கு முன்பாக இலங்கை அரசுடன், இந்தியா பேச்சு நடத்தி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 

இந்தியப் பிரதமரின் கொழும்பு பயணத்தின் போது இந்திய - இலங்கை கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப் படுவதையும் இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Ramadoss Request to PM Modi for Tamil Fisherman issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->